சமையலில் பயன்படுத்தும் உப்பில் இருக்கும் அயோடின் உடலுக்கு மிகவும் அவசியமானது. குறிப்பாக தைராய்டு சுரப்பி சீராக செயல்படுவதற்கு அயோடின் முக்கியப் பங்கு வகிக்கிறது. அயோடின் போதுமான அளவு கிடைக்காதபோது, உடலில் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்.
தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் T3 மற்றும் T4 என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்களை உருவாக்குவதற்கு அயோடின் தேவைப்படுகிறது. உணவில் அயோடின் அளவு குறையும்போது, தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்பட முயற்சிப்பதால் அது பெரிதாகி ‘காய்டர்’ எனப்படும் கழுத்து வீக்கம் ஏற்படலாம். சிலருக்கு தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறைந்தாலும் வெளிப்படையான அறிகுறிகள் உடனடியாக தெரியாமல் இருக்கலாம்.
தூங்கியும் நீங்காத சோர்வு
அயோடின் குறைபாட்டால் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படும்போது, உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடு மந்தமாகலாம். இதனால் போதுமான நேரம் தூங்கிய பிறகும் தொடர்ந்து சோர்வாக இருப்பது, உடலில் சக்தியின்மை மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
சிலர் இதை சாதாரண வேலைப்பளு அல்லது தூக்கமின்மை என நினைத்து காபி, தேநீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சோர்வு தொடர்ந்து நீடித்தால், அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனையுடன் கண்டறிவது அவசியம்.
காரணமின்றி உடல் எடை அதிகரிக்கிறதா?
தைராய்டு ஹார்மோன் அளவு குறையும்போது உடலின் வளர்சிதை மாற்றம் மெதுவாகலாம். இதன் காரணமாக சிலருக்கு உடல் எடை அதிகரிப்புடன், முகம், கைகள், கால்களில் வீக்கம் அல்லது உடலில் நீர் தேங்குவது போன்ற மாற்றங்களும் ஏற்படலாம்.
எனவே, உணவு மற்றும் உடற்பயிற்சியில் பெரிய மாற்றம் இல்லாதபோதும் திடீரென உடல் எடை அதிகரித்தால், தைராய்டு செயல்பாட்டையும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
நினைவாற்றல் மற்றும் சிந்தனையிலும் பாதிப்பு
அயோடின் குறைபாடு தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை பாதிப்பதன் மூலம் மூளையின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால் கவனம் செலுத்த முடியாமல் போவது, சிந்திக்கும் வேகம் குறைவது, அடிக்கடி மறதி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் சிலருக்கு தோன்றலாம்.
இத்தகைய அறிகுறிகளை பலரும் மன அழுத்தம், அதிக நேரம் செல்போன் அல்லது கணினி பயன்படுத்துவது, வயது அதிகரிப்பது போன்ற காரணங்களுடன் தொடர்புபடுத்திவிடுகின்றனர். ஆனால் தொடர்ந்து சோர்வு, உடல் எடை மாற்றம் மற்றும் கவனக்குறைவு ஆகியவை ஒன்றாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
முடி உதிர்வு மற்றும் வறண்ட சருமம்
தைராய்டு ஹார்மோன் அளவு குறைவதால் முடி உதிர்வு மற்றும் சருமத்தில் வறட்சி ஏற்படலாம். குறிப்பாக தலையின் பல பகுதிகளில் ஒரே மாதிரியாக முடி மெலிவது, சருமம் வறண்டு போவது, அரிப்பு அல்லது தோல் செதில்களாக மாறுவது போன்றவை சிலரிடம் காணப்படலாம்.
அயோடின் உப்பை எப்படி பயன்படுத்துவது?
அயோடின் கலந்த உப்பை வாங்குவது மட்டுமே போதாது; அதை சரியான முறையில் சேமிப்பதும் முக்கியம். நீண்ட நேரம் வெப்பம் அல்லது நேரடி சூரிய ஒளியில் இருப்பதால் உப்பில் உள்ள அயோடின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
எனவே, அயோடின் கலந்த உப்பை ஈரப்பதம் இல்லாத, மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து, நேரடி வெயில் படாத இடத்தில் சேமிக்கலாம். மேலும், சமையலின் தொடக்கத்திலேயே அதிக வெப்பத்தில் உப்பை சேர்ப்பதைத் தவிர்த்து, உணவு தயாராகும் நேரத்திற்கு அருகில் தேவையான அளவு சேர்ப்பது அயோடின் இழப்பை குறைக்க உதவும்.
அயோடின் உடலுக்கு அவசியமான சத்து என்றாலும், அதிகப்படியான அயோடினும் சிலருக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, தைராய்டு தொடர்பான அறிகுறிகள் இருந்தால் தானாகவே அயோடின் மாத்திரைகள் அல்லது கூடுதல் சத்துகளை எடுத்துக்கொள்ளாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது பாதுகாப்பானது.
Also Read: மாத கடைசியில் ரூ.5,000 வரை பணம் மிச்சப்படுத்தணுமா? சேமிப்பை அதிகரிக்க இந்த 5 வழிகளை பின்பற்றுங்க!



