தமிழ்நாட்டில் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை திரட்டும் வகையிலும் அரசு நிர்வாகத்தின் மூலம் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்ட விவகாரத்தில், “அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?” என முதலமைச்சர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க கோரி சுற்றறிக்கை அனுப்பியதும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வெளியானதும் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து அந்த இரண்டு சுற்றறிக்கைகளும் அரசால் திரும்பப் பெறப்பட்ட போதிலும், இதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிரப் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், இடதுசாரி மாணவர்களின் உரிமைக் குரலை நசுக்கும் வகையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் உத்தரவின் பேரில் கல்லூரி கல்வி ஆணையர் இத்தகைய சுற்றறிக்கையை அனுப்பியிருப்பது மிக வன்மையான கண்டனத்திற்குரியது என்றும், எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இவ்வாறான நிர்வாக அத்துமீறல் நடைபெற்றதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் இந்தச் செயல்பாடு முற்றிலும் சட்டவிரோதமானது எனச் சாடிய அவர், அவர் அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாகவும், உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாகப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், இச்சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டதாக கூறிய சமாதான விளக்கத்தை ஏற்க முடியாது என தெரிவித்த சண்முகம், பணிநீட்டிப்பில் இருக்கும் தலைமைச் செயலாளரை உடனடியாக விடுவித்து, திறமையான அதிகாரியை நியமித்து அரசு நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் முதலமைச்சருக்கு உண்டு என தெரிவித்தார்.
Read More : அதிவேகத்தில் ஓவர்டேக் செய்த கார்.. எதிரே வந்த அரசு பஸ்..!! துடிதுடித்து 2 பேர் பலி..!! தேனியில் சோகம்



