கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50), கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த நாகராஜ், லட்சுமி தேவம்மா மீது ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவரை ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்த தோட்டத்திற்கு நாகராஜ் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவரும் தனியாக இருந்தபோது, அந்த இளைஞருடனான பழக்கம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நாகராஜ் உருட்டுக்கட்டையால் லட்சுமி தேவம்மாவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் கொலையை மறைக்க முயன்ற நாகராஜ், லட்சுமி தேவம்மாவின் உடலை தோட்டத்தின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்த உரிமையாளர், அங்கு பெண்ணின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த நாகராஜை கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read: சர்க்கரை நோயாளிகள் தினமும் எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?



