போதைப்பொருள் பழக்கத்தைத்தடுப்பதிலும், ஆரோக்கியமான வலிமையான சமூகத்தை கட்டமைப்பதிலும் விளையாட்டுகள் மிக முக்கியப் பங்காற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர், நூற்றுக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தலைசிறந்த சாதனைகளைப் படைக்க வேண்டுமெனில், பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் நமது வீரர்கள் பரவலாக பங்கேற்க வேண்டும் என்றார்.
மேலும், மைதானத்தில் நேரடியாக களமிறங்காமல் ஒருவரால் மன உறுதியைக் கற்றுக்கொள்ள முடியாது என்றும், விளையாட்டு என்பது வெறும் வெற்றியை மட்டுமல்லாமல், ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்வதையும் வீழ்ந்து மீண்டும் எழுவதையும் கற்றுக்கொடுக்கிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 21-ஆம் நூற்றாண்டில் உலகத்தரம் வாய்ந்த நவீன விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார். விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதிநவீன பயிற்சி மையங்கள் மூலம் கிராமப்புற, நகர்ப்புற வீரர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு உலகளாவிய அரங்கிற்கு அவர்கள் வழிநடத்தப்பட்டு வருவதாகவும், ‘கேலோ இந்தியா சம்வாத்’ என்பது போட்டிகளுக்கான களம் மட்டுமல்லாது இளைஞர்களின் புதுமையான சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை உருவாக்கும் தளமாக திகழ்கிறது என்றும் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.



