சென்னை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேளம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், அங்கு வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கேளம்பாக்கம் காவல் நிலையப் போலீசார், உடலை ஆய்வு செய்தபோது அவர் கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலையான நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான சாஹூல் ஹமீது (29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பழைய முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை அரங்கேறியதா அல்லது கூட்டாளிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



