நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் அவர்களின் குடும்பத்தினர் அடையாளம் காணும் வகையில் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக அடக்கம் செய்வதற்கு முன்பு ஒவ்வொரு உடலிலிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்த அடையாள எண் வழங்கப்பட்டு, உடல் எங்கு மீட்கப்பட்டது, எங்கு அடக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் விரிவாகப் பதிவு செய்யப்படுகின்றன.
அடக்கம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட காரணம்
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிக அளவில் மீட்கப்பட்டதால், மருத்துவமனைகள், தற்காலிக பிணவறைகள் உள்ளிட்ட இடங்களில் அவற்றைச் சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சித்வான் பகுதியில் இந்த நிலை அதிகமாக உள்ளது.
மேலும், சில உடல்கள் அழுகத் தொடங்கியுள்ளதால் அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பாக வைத்திருப்பது சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனால், அடையாளம் காணப்படாத உடல்களை முறையாகப் பதிவு செய்த பிறகு அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தகவலின்படி, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 675 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சித்வான் மாவட்டத்தில் மட்டும் 233 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ள நிலையில், 2,498 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்வான் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், அதிக எண்ணிக்கையிலான உடல்கள் குவிந்ததால் அவற்றைச் சேமித்து வைப்பதில் ஏற்பட்ட சிரமம் குறித்து தெரிவித்துள்ளார். உடல்களை வைக்க ஒரு வீட்டையே குளிரூட்டும் மையமாகப் பயன்படுத்தியதாகவும், அந்த இடமும் நிரம்பியதால் வேறு வழியின்றி உடல்களை அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினருக்கு உதவும் டிஎன்ஏ பரிசோதனை
அடக்கம் செய்யப்பட்ட பிறகும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய முடியும் வகையில் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உடலுக்கும் தனித்த அடையாள எண் வழங்கப்படுவதுடன், உடல் மீட்கப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி 100-க்கும் மேற்பட்ட உடல்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தேடி வரும் உறவினர்களுக்கு எதிர்காலத்தில் முக்கியமான தகவல் கிடைக்கும்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் மருத்துவமனைகள் அல்லது சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கலாம். பின்னர், மீட்கப்பட்ட உடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் அவை ஒப்பிடப்படும். டிஎன்ஏ பொருத்தம் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அடையாள எண்ணின் அடிப்படையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் குடும்பத்தினரால் கண்டறிய முடியும்.
அடக்கம் செய்யப்படும் இடங்களிலும் விரிவான பதிவு
உடல்களை அடக்கம் செய்வதிலும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 1.5 மீட்டர் ஆழத்தில் குழிகள் தோண்டப்பட்டு, ஒவ்வொரு உடலுக்கும் இடையே 40 சென்டிமீட்டர் இடைவெளி விடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு உடலைத் தோண்டி எடுக்கும்போது அருகில் உள்ள மற்றொரு உடலின் அடக்கம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
ஒவ்வொரு உடலும் அடையாளம் காணக்கூடிய வகையில் குறியிடப்பட்ட பையில் வைக்கப்படும். மேலும், அடக்கம் செய்யப்பட்ட இடங்களை அடையாளம் காண கான்கிரீட் தளங்கள் மற்றும் பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட உள்ளன. இதனுடன் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் மற்றும் புவியியல் இருப்பிடத் தகவல்களும் (Geo-tagging) பதிவு செய்யப்படுகின்றன.
இதனால், தற்போது அடையாளம் தெரியாமல் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, தேவையான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு உடலை மீண்டும் ஒப்படைக்க அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும்.
Also Read: திருமணப் பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலம்! வருங்கால மனைவிக்காக நாமக்கல் இளைஞர் செய்த வித்தியாசமான சம்பவம்!



