அமெரிக்காவின் புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்த வெள்ளத்தில் பெரிய பாறைகள், இரும்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு கொலராடோ ஆற்றில் கலந்ததாக அமெரிக்க தேசிய பூங்கா சேவை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் Bright Angel Creek பகுதியில் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நீரோடை கொலராடோ ஆற்றில் கலக்கும் நிலையில், சில நிமிடங்களிலேயே நீரின் வேகம் அதிகரித்து, அதன் பாதையில் இருந்த நடைபாலங்கள் சேதமடைந்தன. வெள்ளத்தின் தாக்கத்தால் அந்தப் பகுதியின் நிலப்பரப்பும் கணிசமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, ராஃப்டிங் பயணிகளின் பிரபலமான தங்குமிடமான Phantom Ranch பகுதியில் இருந்தவர்களும் ஹெலிகாப்டர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே, வெள்ளத்துக்குப் பிறகு 20-க்கும் மேற்பட்டோரின் நிலை குறித்து தகவல் கிடைக்கவில்லை என பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டவர்கள் அல்லது முகாமிட்டிருந்தவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Bright Angel Campground, Phantom Ranch மற்றும் North Kaibab Trail-ன் சில பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதால், கொலராடோ ஆற்றில் மேற்கொள்ளப்படும் ராஃப்டிங் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளம் ஏற்பட்டபோது Bright Angel Campground பகுதியில் இருந்த எரிகா வயோலா என்ற சுற்றுலாப் பயணி, தன்னுடன் சுமார் 50 பேர் அங்கிருந்ததாக தெரிவித்துள்ளார். மழை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஓடையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததாகவும், பாறைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதை நேரில் பார்த்ததாகவும் அவர் கூறினார். அந்தச் சேதங்களில் ஒரு தங்குமிடக் கட்டமைப்பும் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
அதன்பின்னர் வயோலா உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்களின் பயணத்தை திட்டமிட்டிருந்ததை விட இரண்டு நாட்களுக்கு முன்பாகவே முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
Flagstaff பகுதியைச் சேர்ந்த தேசிய வானிலை சேவை வானிலை ஆய்வாளர் ஜஸ்டின் ஜான்ட்ரோவ் கூறுகையில், சுமார் 30 நிமிடங்களில் 0.5 முதல் 1 அங்குலம் வரை மழை பெய்ததாகத் தெரிவித்தார். கிராண்ட் கேன்யனின் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு காரணமாக பெய்த மழையின் பெரும்பகுதி உடனடியாக வெள்ள நீராக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Bright Angel Creek அமைந்துள்ள பகுதியில் இருந்து North Rim வழியாக கொலராடோ ஆற்றை நோக்கி நீர் வேகமாக இறங்குகிறது. இந்தப் பகுதியில் சுமார் 6,000 அடி உயர வித்தியாசத்தில் நீர் கீழ்நோக்கிப் பாய்வதால், குறுகிய நேரத்தில் பெய்யும் கனமழையும் திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திங்கள்கிழமை வரை அந்தப் பகுதியில் மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீட்பு மற்றும் சேத மதிப்பீட்டுப் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Utah State University-யின் Colorado River Studies மைய இயக்குநர் ஜாக் ஷ்மிட், இந்த சம்பவம் கிராண்ட் கேன்யன் எப்போதும் இயற்கை மாற்றங்களுக்கு உட்படும் உயிரோட்டமான நிலப்பரப்பு என்பதை மீண்டும் நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
தேசிய பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து சேதங்களை ஆய்வு செய்து வருவதுடன், அரிசோனா பொது பாதுகாப்புத் துறையுடன் இணைந்து மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
Also Read: இந்தியாவில் 30 லட்சம் வேலைகளுக்கு ஆபத்தா?… AI வருகையால் இளைஞர்களுக்கு புதிய சவால்!



