கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலமான பரிவர்த்தனை மதிப்பு ஆண்டிற்கு 20% அதிகரித்து, ரூ. 29.82 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மேலும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 22% உயர்ந்து 2,451 கோடி ஆகப் பதிவாகியுள்ளது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் தினமும் சராசரியாக 79.1 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இதன்படி தினசரி சராசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ. 96,205 கோடி ஆகும். இதேபோல், ஜூன் மாதத்தில் 2,366 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 29.88 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்றது. அப்போதைய தினசரி சராசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 76.3 கோடியாகவும், மதிப்பு ரூ. 96,383 கோடியாகவும் இருந்தது.
இருப்பினும், ஆகஸ்ட் மாதத்தில் உடனடி பணப்பரிவர்த்தனை சேவை (IMPS) மூலம் 36 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 18% வளர்ச்சியடைந்து ரூ. 7.04 லட்சம் கோடியை எட்டியுள்ளது. தினமும் சராசரியாக 1.16 கோடி IMPS பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 22,701 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் UPI தளமானது யாரும் எதிர்பாராத வகையில் அபார வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, 2016‑17 நிதி ஆண்டில் வெறும் 2 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள், 2025‑26 நிதி ஆண்டில் 24,162 கோடிக்கும் அதிகமாக உயர்ந்து 12,000 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல், பரிவர்த்தனை மதிப்பு ரூ. 0.07 லட்சம் கோடியிலிருந்து சுமார் ரூ. 314 லட்சம் கோடியாக அதிகரித்து 4,000 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தற்போதைய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 741 வங்கிகள் UPI நெட்வொர்க்கில் நேரடியாக இணைந்துள்ளன.
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சியின் தூணாகத் திகழும் UPI, தற்போது 11 நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் கிரீஸ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் UPI தளத்தை ஏற்றுக்கொண்டன. ஏற்கனவே, பூட்டான், நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பிரான்ஸ், இலங்கை, மொரீஷியஸ் மற்றும் கதார் ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.
இதேபோல், NPCI-ன் சர்வதேசப் பிரிவான NIPL, உஸ்பெகிஸ்தானின் ‘HUMO’ தேசிய கட்டண முறையை இயக்கும் NIPC உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியப் பயணிகள் உஸ்பெகிஸ்தானில் உள்ள ‘UZQR’ கியூ-ஆர் குறியீட்டைத் தங்கள் UPI செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து எளிதாகக் கடைகளில் பணம் செலுத்த முடியும்.



