பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வு காரணமாக, இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் பல லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழக்கும் “உடனடி ஆபத்தில்” இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
கடல் மட்ட உயர்வு என்பது இனி எதிர்காலப் பிரச்சனை அல்ல; வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தும் தற்போதைய பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஐ.நா. அறிக்கை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள, “கடல் மட்ட உயர்வு தொடர்பான சவால்கள் மற்றும் அதை எதிர்கொள்வதற்கான வழிகள்” (Challenges related to sea level rise and ways and approaches to address it) என்ற தலைப்பிலான அறிக்கையில், உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் நகர்ப்புற உள்கட்டமைப்புகள், போக்குவரத்து, மின்சாரம், கட்டடங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடல் மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் உலகெங்கும் ஒரே மாதிரியாக இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் மியாமி, நியூயார்க் மற்றும் சீனாவின் குவாங்சோ போன்ற அதிக வருமானம் கொண்ட நகரங்களில், கடலோர உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதால் சுமார் $2 டிரில்லியன் முதல் $3.5 டிரில்லியன் டாலர் வரையிலான நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியா (மும்பை, கொல்கத்தா) மற்றும் வங்கதேசம் (டாக்கா) போன்ற தெற்காசியாவின் தாழ்வான டெல்டா பகுதிகளில், இதன் முக்கியத் தாக்கம் மக்களின் இடப்பெயர்வாகவே இருக்கும். இங்கு சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான (14 மில்லியன்) மக்கள் கடல்நீர் புகுவதால் நிரந்தரமாக வீடுகளை இழக்கும் உடனடி அபாயத்தில் உள்ளனர்.
நிதி இழப்புகளுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், மனித உயிர்கள் மற்றும் இடப்பெயர்வு சார்ந்த சமூக பாதிப்புகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்துகிறது.
கடல் மட்டம் உயர்வதோடு மட்டுமின்றி, நிலம் உள்ளிறங்கும் நிகழ்வும் சேர்வதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதால் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
கடலோரச் சுகாதார அமைப்புகள் சேதமடைவதால், நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கின்றன. மேலும், மக்கள் மத்தியில் மனநலப் பாதிப்புகளும், மன அழுத்தமும் பெருகுகின்றன. மீன்பிடித் தொழில், சிறு சுற்றுலாத் துறை மற்றும் துறைமுகங்களை நம்பியுள்ள உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் இதனால் பெருமளவு முடங்கும்.
அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்: மனிதர்களால் ஏற்படும் புவி வெப்பமடைதலே (Global Warming) பனிப்பாறைகள் உருகுவதற்கும், பெருங்கடல்கள் விரிவடைவதற்கும் முக்கியக் காரணமாகும்.
2014 – 2023: உலகளாவிய கடல் மட்டம் ஆண்டுக்குச் சராசரியாக 4.7 மி.மீ உயர்ந்தது.
2024: எல் நினோ (El Nino) மற்றும் பெருங்கடல் வெப்பமயமாதல் காரணமாக இது புதிய உச்சமாக 5.9 மி.மீ ஆக உயர்ந்தது. கடந்த 4,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சில பகுதிகளில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் சுமார் 10% (அதாவது 77 கோடி மக்கள்), உயர் அலை மட்டத்திலிருந்து 5 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? கடல் மட்ட உயர்வு என்பது மெதுவாக நடைபெறும் அதேவேளையில் மாற்ற முடியாத ஒரு நிகழ்வாகும். எனவே, நீண்டகாலத் திட்டமிடல், உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவத் தேவையான நிதியாதாரங்களை உருவாக்குதல் ஆகியவை தற்போதைய அவசரத் தேவையாகும் என ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



