உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் 12 பேர், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் பஜ்ரா அறுவடைப் பணிக்காக வேனில் சென்றுகொண்டிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை குண்ட்லி–மானேசர்–பலவல் (KMP) விரைவுச்சாலையில், கற்கோடா அருகே IMT பகுதியில் அவர்கள் சென்ற ஈகோ வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பிலிபிட் மாவட்டம் பேடேபுரா கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஜஜ்ஜாருக்கு அறுவடைப் பணிக்காக சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த வேன் மீது வேகமாக வந்த வாகனம் மோதியுள்ளது. மோதலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும், அப்பகுதி மக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் கற்கோடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் படுகாயமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக ரோஹ்தக்கில் உள்ள PGIMS மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் பிலிபிட் மாவட்டம் பேடேபுரா கிராமத்தைச் சேர்ந்த ராம்நரேஷ் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற இருவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. காயமடைந்தவர்களாக நியூவா ராம், பிரமோத், சஞ்சீவ், மகேந்திர பால், ஃபதிலால், ஹரிசங்கர், குஷாலி, சோட்டு மற்றும் விவேக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், விபத்து குறித்து பிலிபிட்டில் உள்ள உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கற்கோடா காவல் நிலைய ஆய்வாளர் அனில் குமார் தலைமையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அது லாரியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், போலீஸ் புகாரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், அதனை ஓட்டியவரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Also Read: விலகிய நீரஜ் சோப்ரா!. ஆசிய விளையாட்டில் களமிறங்கும் யஷ்வீர் சிங்!.



