“எனக்கான பணம்” என்ற உணர்வை இல்லத்தரசிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு கணவர் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குடும்பச் செலவுகளுக்காக பணம் வழங்குவதற்கு பதிலாக, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் தனது மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் தனியாக ஒரு தொகையை வழங்கி வருகிறார்.
இந்தப் பணத்தை மனைவி எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கணவர் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. தனக்கு தேவையான பொருட்களை வாங்குவது, சேமிப்பது அல்லது பெற்றோருக்கு அனுப்புவது என அவரது விருப்பப்படி அந்தப் பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் தனிப்பட்ட தேவைகளுக்காக கணவரிடம் பணம் கேட்க வேண்டிய சூழல் தவிர்க்கப்படுகிறது.
இந்தத் தகவலை ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்ததையடுத்து, இல்லத்தரசிகளின் பொருளாதார சுதந்திரம் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. அரசு அதிகாரியாக பணியாற்றும் தனது அண்ணன், மனைவிக்காக இந்த நடைமுறையை பின்பற்றி வருவதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் குடும்பத்தில் மளிகைச் செலவு, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட வழக்கமான குடும்பச் செலவுகளை கணவர் தனியாக கவனித்து வருகிறார். மனைவிக்கு வழங்கப்படும் தொகை குடும்ப பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இல்லாமல், அவரது சொந்த பயன்பாட்டுக்கான பணமாகவே உள்ளது.
இதற்குப் பின்னால் இருக்கும் காரணமும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமையல், வீட்டை சுத்தம் செய்தல், குடும்பத்தின் அன்றாட தேவைகளை கவனித்தல் என இல்லத்தரசி மேற்கொள்ளும் பணிகளுக்கு வெளியே ஒருவரை நியமித்தால் ஊதியம் வழங்க வேண்டியிருக்கும். அதே உழைப்பை வீட்டில் மனைவி செய்வதால் அதற்கு எந்தப் பொருளாதார மதிப்பும் இல்லை என்று கருதக்கூடாது என்பதே இந்த அணுகுமுறையின் அடிப்படை.
இந்த நடைமுறையை ஆதரிப்பவர்கள், வீட்டை நிர்வகிப்பதும் முழுநேரப் பொறுப்புதான் என்பதையும், அதற்கான அங்கீகாரம் இல்லத்தரசிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, சொந்தமாக பயன்படுத்தக்கூடிய பணம் இருப்பது பெண்களின் நிதி சுதந்திரத்துக்கு உதவும் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், இல்லத்தரசிகளின் உழைப்பை மதிப்பது என்பது மாதந்தோறும் பணம் கொடுப்பதுடன் மட்டும் முடிந்துவிடாது என்ற கருத்தும் எழுந்துள்ளது. குடும்ப முடிவுகளில் சம உரிமை, நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் தனிப்பட்ட பொருளாதார பாதுகாப்பு ஆகியவையும் முக்கியம் என சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு வீட்டை நடத்துவதற்காக செலவிடப்படும் நேரத்துக்கும் உழைப்புக்கும் மதிப்பு இருக்க வேண்டும் என்ற கேள்வியை இந்தச் சம்பவம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளது.
Also Read: வாழ்க்கையை புரட்டிப்போட்ட பாலியல் வழக்கு.. இன்று சொந்த தொழில் தொடங்கி புதிய அடையாளம் பெற்ற 3 கன்னியாஸ்திரிகள்!



