மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சோலார் நிறுவன ஊழியர் ஒருவர் சமையலறை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் பாண்டித்துரை (35), தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு மதுபோதையில் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகரில் உள்ள தனது உறவினரான ராஜேஷ் கண்ணன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு பாண்டித்துரைக்கும், ராஜேஷ் கண்ணன் – சிந்துஜா தம்பதிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
அப்போது ராஜேஷ் கண்ணன் அவரைத் தாக்கிய நிலையில், ஆத்திரமடைந்த சிந்துஜா சமையலறை கத்தியை எடுத்து வந்து பாண்டித்துரையின் முதுகு, வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டை விட்டு வெளியேறி ஓடிவந்த பாண்டித்துரை, சிறிது தூரத்திலேயே சாலையில் சுருண்டு விழுந்தார்.
அப்பகுதி மக்களின் தகவலின் பேரில் விரைந்து வந்த திருமங்கலம் நகர் போலீசார், ஆபத்தான நிலையில் கிடந்த பாண்டித்துரையை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கடுமையான ரத்தப்போக்கு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாண்டித்துரையின் மனைவி நித்யா அளித்த புகாரில், “ராஜேஷ் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த காலகட்டத்தில், எனது கணவர் பாண்டித்துரைக்கும் சிந்துஜாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய தகாத உறவு இருந்தது. இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தோம்; பின்னர் உறவினர்கள் பேசிச் சமாதானம் செய்ததால் திருநகரில் தனியாக வசித்து வந்தோம்” என்று பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.
விடுமுறைக்காக ராஜேஷ் கண்ணன் ஊருக்கு வந்திருந்த நேரத்தில் பாண்டித்துரை அங்கு சென்று தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இக்கொலை வழக்கில் ராஜேஷ் கண்ணன் மற்றும் அவரது மனைவி சிந்துஜா ஆகிய இருவரையும் கைது செய்த திருமங்கலம் நகர் போலீசார், சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ஸ்தம்பிக்கும் தமிழகம்..!! 5 நாட்களுக்கு தொடர் போராட்டம்..!! விவசாயிகள் அதிரடி அறிவிப்பு..!!



