கிருஷ்ணர் வேடமணிந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனின் உயிரை, அவன் அணிந்திருந்த முத்து மாலையே பறித்த சோகம் பீகாரில் நடந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாக மாலையின் மணி தொண்டையில் சிக்கியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் கூச்செஸ் வட்டாரத்துக்கு உட்பட்ட பகீரத் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஆர்யன், கிருஷ்ணர் வேடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தான். விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கழுத்தில் முத்து மாலை அணிந்திருந்த அவன், விளையாடிக் கொண்டிருந்தபோது மாலையில் இருந்த ஒரு மணியை வாயால் கடித்து இழுத்துள்ளான். இதில் மாலை திடீரென அறுந்த நிலையில், ஒரு மணி எதிர்பாராத விதமாக அவனது தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
மணி தொண்டையில் சிக்கியதால் சிறுவனுக்கு உடனடியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அவன் மயங்கி விழுந்த நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
குழந்தையை மகிழ்ச்சியாக அலங்கரித்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிய குடும்பத்துக்கு, இந்த எதிர்பாராத சம்பவம் மிகப்பெரிய சோகமாக மாறியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் விளையாடும்போதும் அலங்காரம் செய்யும்போதும் அவர்களின் வாயில் செல்லக்கூடிய சிறிய பொருட்கள் அருகில் இருக்காதபடி பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
சிறு குழந்தைகள் அணியும் மாலைகள், மணிகள், சிறிய அலங்காரப் பொருட்கள் போன்றவை எதிர்பாராத நேரத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, குழந்தைகளுக்கு விழா அலங்காரம் செய்யும்போது அவர்களின் வயதுக்கும் பாதுகாப்புக்கும் ஏற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதுடன், அவர்கள் அணிந்திருக்கும் பொருட்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம்.
Also Read: விஜய்க்கு ஜோடியாக கமிட்டானதும் த்ரிஷா செய்த அந்த விஷயம்… மனம் திறந்த மாளவிகா மோகனன்!.



