தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில், நடிகை த்ரிஷா தனக்கு அளித்த அரவணைப்பு மற்றும் ஆதரவு குறித்து நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசிக்கு அருகில் நடைபெற்றபோது, அங்கு த்ரிஷாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.
அப்போது தான் தமிழ் சினிமாவிற்கு புதிது என்பதால், படப்பிடிப்புத் தளத்தில் சற்று தயக்கத்துடன் இருந்ததாக மாளவிகா தெரிவித்தார். ஆனால், பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தும், த்ரிஷா தன்னை தேடி வந்து மிகவும் அன்பாகப் பேசியதாக அவர் கூறினார்.
மாளவிகா கூறுகையில், “வாரணாசியில் நாங்கள் ஒரே ஹோட்டலில்தான் தங்கினோம். த்ரிஷா என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். என்னை மிகவும் கம்ஃபர்ட்டபிளாக உணர வைத்தார். வெளியில் செல்வது குறித்து பிளான் செய்வது, என்னுடன் பேசுவது என எல்லாவற்றிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டார். சினிமா துறையில் யாருமே மற்றவர்களிடம் தேவையின்றி பேச மாட்டார்கள்; அவரவர் வேலையைப் பார்ப்பார்கள். ஆனால், த்ரிஷா அப்படி இல்லாமல் உண்மையான அன்போடு பழகியது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து, சில மாதங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மாளவிகா மோகனனுக்குக் கிடைத்தது. இந்தச் செய்தி வெளியானதும், த்ரிஷா தனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.
அதாவது, சில மாதங்களுக்குப் பிறகு நான் ‘மாஸ்டர்’ படத்தில் கமிட்டானது தெரிந்ததும், த்ரிஷா எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், ‘ஹே பேப், உனக்கு இது கிடைத்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இது ரொம்ப பெரிய விஷயம், வாழ்த்துகள்!’ என்று குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு பெரிய மனசு இருக்கணும்னா அது த்ரிஷாவுக்கு மட்டும்தான் முடியும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். திரைப்பட உலகில் சக நடிகர்களின் வளர்ச்சியைப் பார்த்து மனதார வாழ்த்தும் த்ரிஷாவின் இந்த உயர்ந்த குணம் தற்போது இணையத்தில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.



