அமைப்புசாரா தொழிலாளர்கள், குறைந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் ஏழை எளிய மக்களின் முதியோர் காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட உன்னதமான சேமிப்புத் திட்டமே ‘அடல் பென்சன் யோஜனா’ (APY) ஆகும். 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து, தங்களின் 60 வயதுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
உத்தரவாத ஓய்வூதியம்: சந்தாதாரர் செலுத்தும் மாதாந்திரப் பங்களிப்பைப் பொறுத்து, 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ. 1,000, ரூ. 2,000, ரூ. 3,000, ரூ. 4,000 அல்லது ரூ. 5,000 வரை உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும்.
வயதும் பங்களிப்பும்: 18 வயதிலேயே இத்திட்டத்தில் இணைந்தால் மிகக் குறைந்த தொகையைச் செலுத்தி அதிகபட்ச ஓய்வூதியத்தைப் பெறலாம். வயது அதிகரிக்க அதிகரிக்க மாதாந்திரப் பங்களிப்புத் தொகையும் உயரும்.
குடும்பப் பாதுகாப்பு: சந்தாதாரர் மறைந்தால் அவரது வாழ்க்கைத் துணைக்கு அதே ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும். இருவரும் மறைந்துவிட்டால், திரட்டப்பட்ட மொத்தத் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
வங்கி அல்லது தபால் நிலையக் கணக்குடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், நெட் பேங்கிங் மூலமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகிலுள்ள வங்கி மற்றும் அஞ்சல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று APY விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆதார் நகலை இணைத்துச் சமர்ப்பிக்கலாம். மாதாந்திரப் பங்களிப்புத் தொகையானது வங்கிக் கணக்கிலிருந்து ‘ஆட்டோ டெபிட்’ (Auto Debit) முறையில் தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.
முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியுமா?
இத்திட்டத்தில் 60 வயது வரை சேமிப்பைத் தொடர்வதே முழுப் பலனைத் தரும். எனினும், சந்தாதாரரின் எதிர்பாராத இறப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான தீவிர நோய் பாதிப்பு போன்ற அசாதாரண சூழல்களில் மட்டுமே 60 வயதுக்கு முன் கணக்கை முடித்து பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படும். 60 வயதுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் விண்ணப்பம் அளித்து மாதந்தோறும் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
Read More : 90s கிட்ஸ் கையில் தவழ்ந்த Nokia, BlackBerry..!! இந்த நிறுவனங்கள் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா..?



