கோவையில் நடந்த தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், மதுக்கடைகளில் முறைகேடு செய்பவர்கள் மீது 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என தெரிவித்தார்.
கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடன் அமைச்சர் மதன்ராஜ் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் உடன் பங்கேற்ற அமைச்சர் விக்னேஷ், பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “மதுக்கடைகளில் ஏதேனும் முறைகேடுகளோ, தவறுகளோ நடந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பதில் எந்தவித சமரசமும் இருக்காது. தவறுகளை இந்த அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. அதே சமயம், சில பகுதிகளில் ஊழியர்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, ஒரு புகார் உண்மையெனத் தெரியவந்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை உறுதி செய்யப்படும்” என்றார்.
தொடர்ந்து, “உங்கள் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சில மதுபான ஆலை உரிமையாளர்கள், உங்கள் இலாகாவை மாற்ற அரசுக்கு அழுத்தம் தருவதாகக் கூறப்படுகிறதே?” என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அது உண்மையா எனத் தெரியவில்லை. பொதுவாக நல்லது செய்யும்போது சும்மா இருப்பவர்கள் இதுபோன்ற அழுத்தங்களை தருவது வழக்கம் தான். அவர்களால் முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்; அதைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று பதிலளித்தார்.


