இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இரண்டு அழகு கிரீம்கள் தொடர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
CDSCO வெளியிட்ட எச்சரிக்கையில் Chandni Whitening Cream மற்றும் Goree Beauty Cream ஆகிய இரண்டு கிரீம்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கிரீம்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிக அளவு கன உலோகங்கள் உள்ள கிரீம்களை தொடர்ந்து அல்லது பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால், இந்த இரண்டு கிரீம்களையும் பயன்படுத்த வேண்டாம் என CDSCO அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே வாங்கியிருந்தாலும் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றின் தயாரிப்பு மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் Drugs and Cosmetics Act, 1940 மற்றும் Cosmetics Rules, 2020 ஆகியவற்றின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் கிரீம்களுக்கு உரிய உற்பத்தி உரிமம் பெற்றிருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிரீம்கள் மத்திய உரிமம் வழங்கும் அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கிரீம்களை வாங்கும்போது அதன் பேக்கேஜிங்கில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என CDSCO அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, உற்பத்தி உரிம எண், தயாரிப்பாளரின் பெயர் மற்றும் விவரங்கள், பேட்ச் எண், உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவை இடம்பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இறக்குமதி செய்யப்பட்ட கிரீமாக இருந்தால், அதற்கான உரிய பதிவு எண்ணும் பேக்கேஜிங்கில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் கிரீம்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துமாறும், Chandni Whitening Cream, Goree Beauty Cream மற்றும் இதேபோன்ற பெயர்களில் விற்பனை செய்யப்படும் கிரீம்களை தவிர்க்குமாறும் CDSCO பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Also Read: வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை.. கடைசியாக வந்த நபர் யார்? போலீசாரை அதிரவைத்த சம்பவம்!



