புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கலந்துகொண்டு, மாணவிகளுக்குச் சேர்க்கை ஆணைகளை வழங்கிப் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வருவது போல, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இலவசப் பேருந்து வசதியை ஏற்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து அதிகாலை வேளையிலேயே புறப்பட்டு நகர்ப்புறக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களின் போக்குவரத்து சிரமத்தை குறைக்க இத்திட்டம் உதவும் என்றார். இக்கல்லூரியில் தற்போது முன்னாள் மாணவிகள் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை, விரைவில் அரசே ஏற்று முழுமையாக நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
சுழற்சி (Shift) முறையில் இயங்கி வரும் இக்கல்லூரியை முழு நேர வழக்கமான (Regular) கல்லூரியாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள், நவீனக் கலையரங்கம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகள் பொதுப்பணித் துறையின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார். படிப்பில் எவ்வித உயர்வும் தாழ்வும் இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், மாணவிகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தித் தங்களது துறைகளில் சாதனையாளர்களாக உயர வேண்டும் என அறிவுறுத்தினார்.
Read More : மக்களை தூங்கவிடாத டவுசர் கேங்..!! நள்ளிரவில் திக் திக்..!! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!



