திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 9-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 51 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பரிசீலனையில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 22 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும், சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொத்தம் 51 மனுக்களில் 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. வேட்பாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சத்தியபாமா வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, அ.தி.மு.க.வினர் அவரது காரை வழிமறித்து தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சத்தியபாமா கடந்த சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதற்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார். பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் தலைமை மீதான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த சத்தியபாமா, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தாராபுரம் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read:எச்சரிக்கை! டாய்லெட் மட்டும் இல்லை.. வீட்டின் இந்த இடங்களையும் சுத்தமாக வைத்து கொள்ளுங்க!



