தேனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் 49 வயதான பாலா என்கிற வேந்தர் பாலா. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி ராஜலட்சுமிக்கு 19 வயதான ஸ்ரீகாந்த் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதே போல் இவரது இரண்டாவது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், இவர் தற்போது தனது 3வது மனைவியுடன் எம்ஜிஆர் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், முதல் மனைவியின் மகனான ஸ்ரீகாந்த், தங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு தந்தை வேந்தர் பாலாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால், தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீகாந்த் திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த்தின் தாயார் இது தொடர்பாக தேனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஸ்ரீகாந்த்தை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் பல நாட்கள் ஆகியும் கிடைக்காத நிலையில், ராஜலட்சுமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இப்புகார் மனுவை ஏற்ற நீதிமன்றம் இவ்வழக்கை தேனி போலீசாரிடமிருது கடந்த ஏப்ரல் மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியது. அவர்களது விசாரணையில் தந்தை, மகன் இடையே சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்ததை அறிந்துள்ளனர். இதனால், வேந்தர் பாலா மற்றும் அவரது நண்பர்களான அலெக்ஸ் (28), கருப்பையா (53) ஆகியோரை கடந்த 2 மாதமாக கண்காணித்து வந்தனர்.
இதில், சிபிசிஐடி போலீசார் அலெக்ஸை பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வேந்தர் பாலா கடந்த 2023 செப்டம்பர் மாதம் ஸ்ரீகாந்தை தேனி அரண்மனைப்புதூர் ரயில் தண்டவாளம் அருகே, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர் கறிவெட்டும் கத்தியால் ஸ்ரீகாந்தின் உடலை துண்டு, துண்டாக வெட்டி முல்லையாற்றில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இதற்கு அவரது நண்பர்களான கருப்பையா, அலெக்ஸ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
தனது மகனை வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்திகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள தாமரைக்குளம் கண்மாயில் எறிந்துள்ளனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார், வேந்தர் பாலாவையும், அலெக்ஸையும் கைது செய்தனர். தலைமறைவான கருப்பையாவை தேடி வருகின்றனர். சொத்துப் பிரச்னையில் பெற்ற மகனை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மூட்டு வலி தாங்க முடியலையா? அப்போ அடிக்கடி இதை சாப்பிடுங்க… வித்தியாசம் உங்களுக்கே தெரியும்!


