சென்னையில் நடந்த திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் பங்கேற்றுத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெரும்பான்மை பலம் கூட இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் தயவில் இயங்கும் தவெக அரசு, அவர்களையே நம்பாமல் குதிரை பேரம் நடத்திக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதும், அவற்றுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுமே தற்போதைய அரசின் சாதனையாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “முதல்வர் தொடர்ந்து திரைப்பட படப்பிடிப்பு மனநிலையிலேயே இருக்கிறார். பஞ்ச் டயலாக் பேசுவதும், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதுமாக மக்கள் முன்னிலையில் நடித்து வருகிறார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை 25 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டனர். திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் மகளிருக்கு உரிமைத்தொகையாக ரூ.2,000 கிடைத்திருக்கும்; அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன்களும், 25 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார்களும் கிடைத்திருக்கும்” என பட்டியலிட்டார்.
தொடர்ந்து விலைவாசி உயர்வை முன்வைத்து ஆளும்கட்சியை எச்சரித்த அவர், “திமுக ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தற்போதைய நிர்வாகச் சீர்கேட்டால் விலைவாசி உயர்வில் நம்பர் ஒன் மாநிலமாக மாறப்போகிறது. நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை கவனத்தைத் திசைதிருப்புகின்றனர். முதல்வர் அணியும் ஆடை, நெற்றிப்பொட்டு, கையில் கட்டும் கயிறு போன்ற தேவையற்ற விஷயங்களை முன்னிறுத்தி ஆட்சியின் தோல்விகள் மூடி மறைக்கப்படுகின்றன. முதல்வர் விஜயின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால், தற்போது போட்டி நடப்பது மின்வெட்டுக்கும் அரிவாள்வெட்டுக்கும் நடுவேதான்” என்று கடுமையாக சாடினார்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம், பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு, தொடர் கொலைகள் என சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து, குற்றவாளிகளின் வேட்டைக்காடாக மாநிலம் மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். முதல்வரின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய ஸ்டாலின், “தொழில்துறை அமைச்சரோ, துறையின் செயலாளரோ இல்லாமல் முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதல்வர், இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களுடனே லண்டனில் ஒப்பந்தம் போடும் அவலம் அரங்கேறியுள்ளது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் மக்கள் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்க முடியாமல், பழைய மிசா மற்றும் சர்க்காரியா கமிஷனைப் பேசி திசைதிருப்பப் பார்க்கிறார்கள். எனது மிசா தியாகத்திற்கு மதிப்பெண் போட இங்கு எவருக்கும் தகுதி கிடையாது; சிட்டிபாபுவின் சிறை டைரியும், எம்ஜிஆர் அமைத்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கையுமே அதற்குச் சான்று” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
விரைவில் நடைபெற உள்ள இரு தொகுதி இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், பிற கட்சிகளில் வென்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி, விரலில் வைத்த மை காய்வதற்குள் இடைத்தேர்தலைத் திணித்துள்ளதாகச் சாடினார். “சாதாரணமாக எம்எல்ஏ மரணமடைந்தால் தான் இடைத்தேர்தல் வரும்; ஆனால் இங்கு ஜனநாயகமே படுகொலை செய்யப்பட்டுள்ளது. கொளுந்துவிட்டு எரியும் விலைவாசி, கரண்ட் கட், டெங்கு பரவல், ஒரே நாளில் அரங்கேறும் தொடர் கொலைகள் எனச் செயலிழந்து கிடக்கும் அரசின் ஆணவத்திற்கும் திமிருக்கும் பாடம் புகட்டும் களமாக இந்த இடைத்தேர்தல் அமைய வேண்டும்” என்றார்.



