டாஸ்மாக் கடைகளில் இனி புது லுக்!. புதிய சீருடை தைக்க ரூ.6,000 வங்கி கணக்கில் வரவு!. தமிழக அரசு அதிரடி!

tasmac uniform 30kb

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் புதிய சீருடை திட்டத்தைக் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே எலைட் வகை டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் சீருடை அணிந்து பணிபுரிந்து வரும் நிலையில், தற்போது அனைத்து சாதாரண கடைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும் என மேலாண் இயக்குநர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


ஊழியர்களின் சீருடைக்காக ஆண்டிற்கு ரூ.6,000 வீதம் படித்தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். ஒரு செட் சீருடை தைக்க ரூ.2,000 வீதம் மொத்தம் 3 செட் சீருடைகளுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. நடப்பு 2026-27 நிதியாண்டிற்கான தொகை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக மாவட்ட வாரியாக உள்ள ஊழியர்களின் பட்டியலைச் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீருடையைப் பொறுத்தவரை, மேற்பார்வையாளர்களுக்கு ‘லைட் ப்ளூ’ (Light Blue) சட்டையும் ‘நேவி ப்ளூ’ (Navy Blue) பேண்ட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ‘பீஜ்’ (Beige) நிற சட்டையும் ‘டார்க் ப்ளூ’ (Dark Blue) பேண்ட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களின் சட்டையிலும் இடது மார்பு பகுதியில் டாஸ்மாக் முத்திரை (Logo) இடம்பெற வேண்டும். ஊழியர்கள் சட்டையை ‘டக்-இன்’ செய்தோ அல்லது செய்யாமலோ பணியில் ஈடுபடலாம்.

துணியின் நிறம் மற்றும் தரத்தில் மாறுபாடு ஏற்படுவதைத் தவிர்க்க, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாகத் துணிகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் துணிகளை வாங்கிக் கொள்ளலாம். வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் துணிகளைக் கொள்முதல் செய்து, நவம்பர் 10-ஆம் தேதிக்குள் தைத்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நிதியாண்டுகளில் (ஏப்ரல் – மார்ச்) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதியன்றே இந்த சீருடைப்படி ஊழியர்களின் கணக்கில் விடுவிக்கப்படும். இதன் மூலம் டாஸ்மாக் கடைகளின் நிர்வாகத்தில் ஒரு சீரான அமைப்பும் தொழில்முறையும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! அறிவியல் யுகத்திலும் மக்களை மிரட்டும் விசித்திர மூடநம்பிக்கைகள்..! இன்றும் இருக்காம்..!

Sun Sep 20 , 2026
மூடநம்பிக்கைகள் என்றாலே இந்தியாவில் மட்டுமே அதிகம் இருப்பதாகப் பலர் நினைக்கக்கூடும்; ஆனால் உண்மையில் உலகம் முழுவதுமே பல்வேறு விசித்திரமான மூடநம்பிக்கைகளும் கட்டுப்பாடுகளும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் இன்றும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நவீன யுகத்திலும் கூட, உலக மக்கள் தீவிரமாக நம்பிப் பின்பற்றி வரும் சில விநோத நம்பிக்கைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இரவில் சூயிங்கம் மென்றால் சடலத்தை உண்பதற்குச் […]
Poojai 2026

You May Like