கேரளாவில் கனமழை கோரத்தாண்டவம்.. நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் 5 பேர் பலி!

d4a684e5484997f637b8362a66c58de6dba3d2e89c0104c6139472c059ed1b42

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இடுக்கி மாவட்டம் வட்டவடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், சோக்காடு ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இடுக்கி மாவட்டம் வட்டவடா அருகே கொட்டக்கம்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்துகொண்டிருந்தபோது, தொழிலாளர்கள் சிலர் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பண்ணை குடிலில் தஞ்சமடைந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மலையில் இருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து குடிலின் மீது விழுந்தன.

இந்த விபத்தில் சின்னம்மா மற்றும் அவரது சகோதரர் பாலச்சந்திரன் ஆகியோர் மண்ணில் சிக்கி உயிரிழந்தனர். மரியம்மா படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நிலச்சரிவு ஏற்பட்டதும் அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை தொடங்கினர். மழை தொடர்ந்து பெய்ததுடன், அந்தப் பகுதி கடினமான மலைப்பாதையாக இருந்ததால் முதற்கட்டமாக மண் மற்றும் இடிபாடுகளை கைகளால் அகற்றி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர்.

குடிலில் தஞ்சமடைந்திருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டார்களா என்பதையும், வேறு யாரேனும் மாயமாகியுள்ளார்களா என்பதையும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, சோக்காடு ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் மாயமான பெண் மற்றும் 2 ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கேரளாவின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்துள்ளது.

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் 115.5 மி.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைத் தொடர்ந்து சிக்கிம் மாநிலம் கேங்டாக்கிலும் கனமழையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு நிலச்சரிவு, மண் சரிவு மற்றும் சாலைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. தொடர் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Also Read: பெண்களின் ஆடைகளை குறிவைத்த மர்ம திருடன்.. வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு ஷாக்!

Saranya

Next Post

"உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்கவில்லை" கரீனா கபூர் உடல் எடை குறைத்த ரகசியம் இது தான்..

Mon Sep 21 , 2026
குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் பல பெண்களுக்கும் இருக்கும். ஆனால் நடிகை கரீனா கபூர் தனது முதல் குழந்தை பிறந்த பிறகு மேற்கொண்ட உடல் எடை குறைப்பு பயணம், கடுமையான டயட் அல்லது உணவைத் தவிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை. நல்ல உணவு, உடற்பயிற்சி, பொறுமை மற்றும் தொடர்ச்சியான பழக்கமே தனது மாற்றத்துக்கு முக்கிய காரணம் என அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளார். […]
kareena kapoor

You May Like