1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா, ராதா. நடிப்புடன் இணைந்து இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் ஏஆர்எஸ் கார்டன் என்ற படப்பிடிப்பு தளத்தையும் நடத்தி வந்தனர். இந்த வளாகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது பெயரில் இருந்த பழைய கையெழுத்திட்ட காசோலைகளை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தி, சுமார் ரூ.46 கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனைக்கு முயற்சி நடந்ததாக ராதா புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பழைய காசோலை புத்தகத்தில் இருந்த 5 காசோலைகள் அம்பிகாவின் பெயரில் வங்கியில் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கியில் இருந்து தகவல் கிடைத்த பிறகு, அந்தப் பணப்பரிவர்த்தனையை நிறுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் ராதா கூறியுள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக அம்பிகா தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். தானும் ராதாவும் இணைந்து உழைத்து உருவாக்கிய சொத்துகளை ராதா தனக்கு மட்டுமே சொந்தமானதாகக் கருதுவது சரியல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
வளசரவாக்கத்தில் உள்ள ஏஆர்எஸ் கார்டன் வளாகத்தின் அசல் ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் ராதாவின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களையே அந்த வளாகத்துக்குள் அனுமதிக்காமல் தடுப்பதாகவும் அம்பிகா தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். குடும்ப மற்றும் தொழில் தொடர்பான நிதி விவகாரங்களை காசோலை மூலம் சரிசெய்வது குறித்து முன்பே பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அந்த காசோலைகள் தொடர்பான விவகாரத்தை ராதா தற்போது காவல் புகாராக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஏஆர்எஸ் கார்டன் உருவான பின்னணியும் இந்த குடும்ப விவகாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் ராதா, அம்பிகா மற்றும் அவர்களின் தாயார் உதவி கோரியதைத் தொடர்ந்து, வளசரவாக்கம் பகுதியில் உள்ள நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக அம்பிகா தரப்பு விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த இடம் படப்பிடிப்பு தளமாக பயன்பட்டு வருகிறது.
அம்பிகா, ராதா இருவரைத் தவிர குடும்பத்தில் மேலும் ஒரு சகோதரியும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர். குடும்ப சொத்துகள் தொடர்பான பாகப்பிரிவினை மற்றும் நிதி விவகாரங்களில் நீண்டகாலமாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாக இரு தரப்பின் புகார்களும் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது ரூ.46 கோடி காசோலை புகார் வரை விவகாரம் சென்றுள்ள நிலையில், போலீஸ் விசாரணை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது.
Also Read: “4 மாதத்துக்குள் ஆட்சி மாற்றம்”.. தவெக அரசை பற்றி எடப்பாடி சொன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு..



