மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமா என்ற சந்தேகமும் கேள்விகளும் பல பெண்களுக்கு எழக்கூடும். “போதுமான அளவு பால் சுரக்குமா?”, “தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா?”, “புற்றுநோய் மீண்டும் வருமா?”, “ஒரு பக்க மார்பகம் அகற்றப்பட்டால் என்ன செய்வது?” போன்ற பல்வேறு பயங்கள் அவர்களிடம் இருக்கும்.
ஆனால், மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்குப் பிறகும் தாய்ப்பால் கொடுப்பது முற்றிலும் சாத்தியமே என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இது ஒருவர் பெற்ற சிகிச்சை முறை, மார்பகத்தின் தற்போதைய ஆரோக்கிய நிலை மற்றும் அவர் தொடர்ந்து சாப்பிடும் மருந்துகளைப் பொறுத்தது.
இது குறித்து பெங்களூரு கே.ஐ.எம்.எஸ் (KIMS) மருத்துவமனையின் முன்னணி மகப்பேறு மற்றும் பெண்கள் நல நிபுணர் டாக்டர் லாவண்யா கிரண் கூறுகையில், “மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் தாய்ப்பால் கொடுப்பது முற்றிலும் சாத்தியமற்றது என நினைக்கக் கூடாது. முந்தைய சிகிச்சையால் மார்பகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டு, தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பான வழியில் தாய்ப்பால் கொடுப்பதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்” என்கிறார்.
அறுவை சிகிச்சை மூலம் ஒரு பக்க மார்பகம் மட்டும் அகற்றப்பட்டிருந்தால் (Single Mastectomy), மற்றொரு ஆரோக்கியமான மார்பகம் குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலை சுரக்கும் திறன் கொண்டது.
அதேநேரத்தில், புற்றுநோய் பாதித்த மார்பகத்தில் கட்டியை மட்டும் அகற்றிவிட்டு, கதிர்வீச்சு (Radiation) சிகிச்சை பெற்ற பெண்களுக்கு, அந்தப் பக்க மார்பகத்தில் பால் சுரப்பு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஏனெனில், கதிர்வீச்சு சிகிச்சை மார்பக திசுக்களையும் பால் நாளங்களையும் பாதித்திருக்கக்கூடும். இருப்பினும், மற்றொரு மார்பகம் இயல்பாகப் பால் சுரக்கும் என்பதால் கவலைப்பட தேவையில்லை.
தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோய் மீண்டும் வருமா? புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்கள் தாய்ப்பால் கொடுக்க யோசிப்பதற்கு ‘புற்றுநோய் மீண்டும் வந்துவிடுமோ’ என்ற பயமே முக்கியக் காரணமாகும்.
ஆனால், இது முற்றிலும் தவறான பயம் என அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பதோ அல்லது தாய்ப்பால் கொடுப்பதோ புற்றுநோய் மீண்டும் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்காது எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
புற்றுநோய் சிகிச்சையின் போது தாய்ப்பால் கொடுக்கலாமா? புற்றுநோய்க்கான கிமோதெரபி, ஹார்மோன் தெரபி மற்றும் இலக்கு சிகிச்சைகளுக்கான (Targeted treatments) மருந்துகளை உட்கொள்ளும் போது தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
ஏனெனில், இந்த வீரியமிக்க மருந்துகள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, ஹார்மோன் தெரபி மருந்துகளைப் பல ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும் என்பதால், கர்ப்பம் தரிப்பது மற்றும் தாய்ப்பால் கொடுப்பது குறித்துப் புற்றுநோய் மருத்துவரிடம் முன்கூட்டியே கலந்தாலோசித்துத் திட்டமிடுவது அவசியமாகும்.
முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்: புற்றுநோய்க்கான சிகிச்சைகள் தொடங்குவதற்கு முன்பே, எதிர்காலக் கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பது குறித்த ஆலோசனைகளைத் தொடங்குவது சிறந்தது.
பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்தால், ‘லாக்டேஷன் கன்சல்டண்ட்’ (Lactation Consultant) எனப்படும் தாய்ப்பால் ஊட்டல் நிபுணர்களின் உதவியைப் பெறலாம். ஒருவேளை தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால், தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பால் அல்லது மாற்றுப் பால் உணவுகளைப் பயன்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போவது எந்த விதத்திலும் தாய்க்கும் குழந்தைக்குமான அன்பையோ பிணைப்பையோ குறைத்துவிடாது.
சுருக்கமாகச் சொன்னால், மார்பகப் புற்றுநோயை வென்றெடுத்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் கனவைக் கைவிட வேண்டியதில்லை. புற்றுநோய் மருத்துவர், மகப்பேறு மருத்துவர் மற்றும் தாய்ப்பால் ஊட்டல் நிபுணர் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆலோசனையோடு பாதுகாப்பாகத் தாய்ப்பால் கொடுக்க முடியும்!



