ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொடரில் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது.
இப்போட்டியின் 4-வது ஆட்டமாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன் – ஹரிஹரன் ஜோடி, சீனாவின் லியூ மற்றும் டிங் இணைக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் செட்டை சீன ஜோடி 21-16 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், இரண்டாவது செட்டில் அதிரடியாக மீண்டெழுந்த அர்ஜுன் – ஹரிஹரன் ஜோடி, இடைவேளையின் போது 11-9 என முன்னிலை பெற்று, இறுதியில் 21-16 என கைப்பற்றி ஆட்டத்தை சமன் செய்தது.
வெற்றியை தீர்மானிக்கும் இறுதி மற்றும் 3-வது செட்டில் சீன வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி 21-9 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதன் மூலம் 16-21, 21-16, 9-21 என்ற செட் கணக்கில் போராடித் தோற்றது இந்திய அணி. முன்னதாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் தங்களது போட்டிகளில் தோல்வியடைந்தனர்.
இந்திய அணிக்கு ஒரே ஆறுதலாக, முன்னணி இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை, சீனாவின் வாங் – லியாங் ஜோடியை 2-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இருப்பினும், சீனா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால், கிடாம்பி ஸ்ரீகாந்தின் கடைசி ஆட்டம் நடத்தப்படாமலேயே முடிவுக்கு வந்தது. இதன்படி, 2026 ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆடவர் அணிப் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர் ஹரிஹரனுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 30 லட்சத்தை ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது. முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழு பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது திறமையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE Sportsperson Scheme’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். ஹரிஹரன் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.



