நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதியில் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக மாத கடைசி நாட்களிலேயே சம்பளப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்பதால், இந்த வேலைநிறுத்தத்தால் உரிய காலத்தில் ஊதியம் கிடைக்குமா, மாதாந்திர குடும்பச் செலவுகள் மற்றும் இ.எம்.ஐ தவணைகளை எப்படி எதிர்கொள்வது என்ற பெரும் குழப்பமும் கவலையும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இச்சூழலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு துரித நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வங்கிகள் மூடப்படுவதற்கு முன்பாகவே சம்பளப் பட்டுவாடாவை முடிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை முன்கூட்டியே வெள்ளிக்கிழமையான நாளையே (செப். 25) வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கும் நாளை (செப். 25) சம்பளம் வரவு வைக்கப்பட உள்ளது. மேலும், ஓய்வூதியம் பெறும் மத்திய அரசின் முன்னாள் ஊழியர்களுக்கும் நாளை வரவு வைக்கப்பட உள்ளது.



