“நீ உயிரோடவே இருக்கக்கூடாது மா”.. தந்தையுடன் சேர்ந்து மகன் செய்த கொடூர செயல்!

623fef0acffd47baea679dfb41ab8832

குடும்பத்துக்குள் நீடிக்கும் சந்தேகம், கோபம், கருத்து வேறுபாடு ஆகியவை சில நேரங்களில் எதிர்பாராத விபரீதங்களுக்கு காரணமாகிவிடுகின்றன. அதிலும், ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் குடும்ப பிரச்சினையின் மையமாக மாறும்போது, அதன் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமையக்கூடும். ராஜஸ்தானில் 11 குற்ற வழக்குகளை எதிர்கொண்ட பெண் ஒருவர் காணாமல் போன சம்பவமும் அப்படியொரு மர்மத்தை ஏற்படுத்தியது. 15 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கணவரும் மகனும் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே மாதராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீமா சவுத்ரி (41). மிண்டு சவுத்ரி என்ற பெயரில் அப்பகுதியில் அறியப்பட்ட இவர், வழக்கமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்த பெண்ணாக இல்லை. சிறு வயதிலேயே தாயை இழந்த அவர், தந்தை மோதிராமின் பராமரிப்பில் வளர்ந்தார்.

இளம் வயதிலேயே ஆட்டோ ஓட்டத் தொடங்கிய சீமா, பின்னர் குற்றப் பின்னணி கொண்ட சிலருடன் பழகியுள்ளார். இதனால் படிப்படியாக குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். 2009-ஆம் ஆண்டு அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு அடிதடி, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் மொத்தம் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் ‘லேடி டான்’ என்ற அடையாளத்துடன் வலம் வந்தார்.

சீமா சவுத்ரியின் தோற்றமும் மற்ற பெண்களிடம் இருந்து மாறுபட்டிருந்தது. பாப் ஹேர்கட் வைத்திருந்த அவர், பெரும்பாலும் சட்டை, பேன்ட் அணிந்தபடியே காணப்பட்டார். ஆட்டோ ஓட்டும்போது காக்கி சீருடையில் செல்வதும் வழக்கம்.

பின்னர் லாலா ராம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹரி ஓம் சவுத்ரி (20) என்ற மகன் உள்ளார். திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருந்த நிலையில், பின்னர் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர். மகன் ஹரி ஓம், தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டு மே மாதம் சீமா திடீரென காணாமல் போனார். இதுகுறித்து குடும்பத்தினர் ஹரி ஓமிடம் கேட்டபோது, குற்ற வழக்கு தொடர்பாக போலீசார் தனது தாயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். சிலரிடம் திஹார் சிறையிலும், மற்றவர்களிடம் பாரத்பூர் சிறையிலும் இருப்பதாக வெவ்வேறு தகவல்களையும் அவர் தெரிவித்தார்.

இதனால் சீமாவின் சகோதரி, அவரை சந்திப்பதற்காக சம்பந்தப்பட்ட சிறைகளுக்குச் சென்றார். ஆனால் அங்கு சீமா இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தனது தாய் மாயமானதாக ஹரி ஓம், 2025 ஜூலை 21-ஆம் தேதி முகானா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போதிலும், அப்போது சீமா குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி முகானா போலீசாருக்கு பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் உடலில் இருந்த ஆடைகள் மற்றும் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் ஒரு கட்டத்தில், கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட உடல் காணாமல் போன சீமா சவுத்ரியுடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேகம் அவரது கணவர் லாலா ராம் மற்றும் மகன் ஹரி ஓம் மீது திரும்பியது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சீமாவுக்கும் அவரது மகன் ஹரி ஓமுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. சீமா தன்னை திட்டி அடித்ததால் மகன் அவர் மீது கோபத்தில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்தது.

மறுபுறம், மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக லாலா ராம் சந்தேகித்துள்ளார். தன்னை விட்டு பிரிந்து தனியாக வாழ்வதற்கும் இதுதான் காரணம் என அவர் நினைத்துள்ளார். இந்த குடும்பப் பிரச்சினையின் பின்னணியில், தாய் மீது மகனுக்கும், மனைவி மீது கணவருக்கும் இருந்த கோபம் ஒன்று சேர்ந்துள்ளது.

இதையடுத்து இருவரும் சேர்ந்து சீமாவை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2025 மே மாதம் சீமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், அவரது உடலை அவர் பயன்படுத்திய ஆட்டோவில் எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில், உடலை பெட்ஷீட்டில் சுற்றி வீசியுள்ளனர்.

பின்னர் சீமா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறி, அவரது மாயத்தை மறைக்க முயன்றுள்ளனர். சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு பாழடைந்த கிணற்றில் உடல் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் இந்த நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.

குற்ற வழக்குகளில் சிக்கி ‘லேடி டான்’ என்ற அடையாளத்துடன் வலம் வந்த பெண்ணை அவரது கணவரும் 20 வயது மகனும் சேர்ந்து கொலை செய்து, நீண்ட காலமாக உண்மையை மறைத்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தூக்கில் சடலம்.. த.வெ.க. நிர்வாகி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மனைவி கைது!

Saranya

Next Post

ஓராண்டாக மாயமான முதல் மனைவி.. 2-வது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்த கணவன்; கல்குவாரியில் சிக்கிய அதிர்ச்சி தடயம்!

Sun Sep 27 , 2026
திருமண வாழ்க்கையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் சில நேரங்களில் குடும்பத்தையே சிதைக்கும் அளவுக்கு தீவிரமடைகின்றன. குறிப்பாக, தம்பதியரிடையே தொடர்ந்து நீடிக்கும் மோதல், ஒரு கட்டத்தில் எதிர்பாராத விபரீதத்துக்கும் வழிவகுக்கலாம். திருநெல்வேலி அருகே சுமார் ஓராண்டாக மாயமாக இருந்த பெண்ணின் வழக்கிலும் தற்போது அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறுக்குப் பிறகு அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதும், பழைய கல்குவாரி குட்டையில் இருந்து அவரது உடல் தொடர்பான தடயங்கள் […]
WhatsApp Image 2026 09 27 at 5.10.00 PM

You May Like