கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் தொடரும் கனமழையால் பல மாநிலங்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உத்தரப் பிரதேசம், ஒடிசா, பீகார் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் கனமழை மற்றும் மழை தொடர்பான சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் 75 மாவட்டங்களில் 63 மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் சராசரி மழைப்பொழிவு இயல்பை விட பல மடங்கு அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெதி, பஹ்ரைச், பண்டா, பாரபங்கி, பஸ்தி, பதேபூர், ஹமீர்பூர், ஹர்தோய், கான்பூர் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அயோத்தியில் 2 பேரும், லக்கிம்பூர் கேரியில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சில இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததாலும், இடி தாக்கியதாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அடுத்த பருவப் பயிர்களுக்கான விவசாயப் பணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உன்னாவ் பகுதியில் கனமழை காரணமாக கங்கை எக்ஸ்பிரஸ்வேயிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உன்னாவ் பகுதியில் 24 மணி நேரத்தில் 65 மி.மீ. மழை பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ஒடிசாவிலும் கனமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 73,000-க்கும் மேற்பட்ட மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கோராபுட், நபரங்பூர், மல்கான்கிரி, ராயகடா, கஞ்சம் மற்றும் கஜபதி உள்ளிட்ட தெற்கு ஒடிசா மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. பல கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளும் விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன.
அரசின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, 10 மாவட்டங்களில் 80 வட்டங்கள், 325 கிராம ஊராட்சிகள் மற்றும் 1,071 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 721 வீடுகள் பகுதி அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சுமார் 4,480 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பீகாரில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்
நேபாளத்தின் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வால்மீகிநகர் தடுப்பணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பீகாரிலும் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.
மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் கந்தக் ஆற்றில் ஏற்பட்ட நீர்வரத்து காரணமாக பல குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் 2,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் இருந்து உருவாகும் ஆறுகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஆற்றங்கரையோர மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என பீகார் அரசு அறிவுறுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு விடுமுறை
சத்தீஸ்கரிலும் தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் சாலைகளில் தண்ணீர் தேக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கொண்டகாவ் மாவட்டத்தில் நீர்நிரம்பிய வயல் பகுதியில் மீன்பிடிக்க முயன்றபோது, பெருக்கெடுத்த ஓடையில் தவறி விழுந்த 40 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு தந்தேவாடா, பிஜப்பூர், கொண்டகாவ், காங்கேர், பஸ்தர், கரியாபந்த், தம்தரி மற்றும் துர்க் ஆகிய 8 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளில் நடைபெற இருந்த காலாண்டுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், வடகிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு சத்தீஸ்கர் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Also Read: “என் பொண்டாட்டி இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்”.. தனிக்குடித்தன பிரச்சினையில் 29 வயது கணவன் எடுத்த விபரீத முடிவு!



