சிறிய தொகையை முதலீடு செய்து நீண்ட காலத்தில் பெரிய தொகையைப் பெற விரும்புவோருக்கு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த PPF திட்டம், நிலையான வருமானத்தையும் வரி சலுகைகளையும் வழங்குவதால் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது, 2024–2025 நிதியாண்டிற்கான இந்த திட்டத்தில் வருடத்திற்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அரசு ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், முதலீட்டாளர்களுக்கு பண பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றப்பட்டாலும், நீண்ட கால முதலீட்டுக்கு இது நம்பகமான திட்டமாக கருதப்படுகிறது.
இந்த PPF திட்டத்தில் மாதம் ரூ.2,500 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.30,000 சேமிக்க முடியும். இந்த முதலீட்டை தொடர்ந்து 15 ஆண்டுகள் மேற்கொண்டால், மொத்த முதலீடு ரூ.4,50,000 ஆகும். இதன் மீது சேரும் வட்டி மூலம், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.8,13,642 வரை பெற முடியும். இதில் ரூ.3,63,642 வரை வட்டி வருமானமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது. அருகிலுள்ள எஸ்பிஐ கிளைக்கு நேரடியாக சென்று கணக்கைத் திறக்கலாம். மேலும், இணைய வங்கி (Internet Banking) அல்லது மொபைல் வங்கி (Mobile Banking) வசதிகள் மூலம் ஆன்லைனிலேயே PPF கணக்கைத் தொடங்கி, முதலீட்டை மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. இதற்காக SBI-யில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது அவசியம்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பெயரில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதேபோல், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் PPF கணக்கைத் தொடங்க முடியும். அவர்கள் 18 வயதை அடையும் வரை சேமிப்புக் கணக்குக்கான விதிமுறைகள் பொருந்தும்; பின்னர் முழுமையான PPF வட்டி நன்மைகள் கிடைக்கும். மொத்தத்தில், குறைந்த தொகையிலேயே தொடங்கி, நீண்ட காலத்தில் நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தை ஈட்ட விரும்புவோருக்கு SBI-யின் PPF திட்டம் ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாக பார்க்கப்படுகிறது.
Read more: SpaceX ராக்கெட் மூலம் விண்ணில் பறந்த ஸ்டார்ட்அப் Satellite..! புதிய வரலாறு படைத்த இந்தியா..



