செப்டம்பர் 28 முதல் நாடு முழுவதும் நடைபெறவிருந்த மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) மற்றும் இந்தியன் பேங்க்ஸ் அசோசியேஷன் (IBA) இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பது தொடர்பாக ஏற்கனவே அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கடைசி நேர ஆலோசனையில் UFBU மற்றும் IBA இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் வகையில் ஐந்து நாள் வங்கி சேவை முறை அமல்படுத்த வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது. இதுதவிர, ஓய்வூதியம் தொடர்பான பல்வேறு விவகாரங்களில் மேம்பாடு, ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி கணக்கீட்டில் ஒரே மாதிரியான நடைமுறை மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறும் வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகள் முறையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளாக இருந்த நிலையில், செப்டம்பர் 28 முதல் வேலைநிறுத்தம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்கு நிறைவு நாளாக இருப்பதால், அந்த காலகட்டத்தில் வேலைநிறுத்தம் நடைபெற்றால் வங்கி சேவைகளில் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போதைய முடிவால் செப்டம்பர் 28 முதல் திட்டமிடப்பட்டிருந்த மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெறாது. இதனால் நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்படவிருந்த உடனடி சேவை பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
Also Read: நேபாளத்தில் மீண்டும் கொட்டும் கனமழை.. வெள்ளம், நிலச்சரிவால் 1,453 பேர் பலி; 5,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!



