கருப்பை பகுதியில் தோன்றும் புற்றுநோய் செல்கள், படிப்படியாக கல்லீரல் உள்ளிட்ட தொலைதூர உறுப்புகளுக்கும் பரவும் விதம் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றும் முதன்மை கட்டியிலிருந்து (Primary Tumour) புற்றுநோய் செல்கள் பிரிந்து, ரத்த ஓட்டம், நிணநீர் மண்டலம் மற்றும் வயிற்று உள் சவ்வுகள் வழியாக மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதையே மருத்துவர்கள் ‘மெட்டாஸ்டாசிஸ்’ (Metastasis) என்கின்றனர். குறிப்பாக கருப்பை புற்றுநோயானது, இடுப்புப் பகுதி மற்றும் வயிற்றின் உள்பகுதியான பெரிட்டோனியல் கேவிட்டி (Peritoneal Cavity) வழியாக நேரடியாகப் பரவுவதோடு, ரத்த நாளங்கள் மூலமாகவும் தொலைவில் உள்ள உறுப்புகளுக்குப் பயணிக்கிறது. இதில் மிக முக்கியமாக கல்லீரலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது.
இந்த ‘மெட்டாஸ்டாசிஸ்’ பரவல் தொடங்கும் ஆரம்ப கட்டத்தில் எந்தவித பெரிய அறிகுறிகளும் தென்படுவதில்லை என எச்சரிக்கும் மருத்துவர்கள், உறுப்புகள் பாதிக்கப்படும்போது மட்டுமே பாதிப்புகள் வெளிப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ச்சியான வயிறு உப்புசம், இடுப்பு வலி, சிறிதளவு உண்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும் உணர்வு ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
அதேசமயம், இப்புற்றுநோய் கல்லீரலுக்குப் பரவும் பட்சத்தில் வயிற்று வீக்கம், மஞ்சள் காமாலை, கடுமையான வயிற்று வலி, அதீத சோர்வு மற்றும் உடல் பலவீனம் ஆகியவை வெளிப்படும். எனவே, ஆரம்பத்திலேயே இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



