ஒரு மாவட்டத்தின் நிர்வாகத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் அதிகாரியின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், பலருக்கும் நம்ப முடியாததாக இருக்கும் ஒரு வாழ்க்கைப் பயணம் தெரிகிறது. ஈரோடு சத்தியமங்கலம் அருகே எளிய குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பின்போதே எருமைகளை மேய்த்து குடும்பத்துக்கு உதவிய சி.வான்மதி, இன்று மகாராஷ்டிராவின் வார்தா மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ளார்.
வான்மதியின் குழந்தைப் பருவத்தில் கல்வி என்பது எளிதான பயணமாக இருக்கவில்லை. டாக்ஸி ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்த தந்தை சென்னியப்பன், இல்லத்தரசி தாய் சுப்புலட்சுமி ஆகியோரின் குடும்பத்தில் வளர்ந்த அவருக்கு, படிப்பைத் தொடர்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பும் உழைப்புடன் இணைந்திருந்தது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிடும் வாழ்க்கை அவருக்கு கிடைக்கவில்லை. வீட்டில் இருந்த எருமைகளை மேய்க்க வேண்டும். அவற்றுக்குத் தேவையான புல், தீவனங்களை சேகரிக்க வேண்டும். பால் கறந்து விற்பனை செய்ய வேண்டும். அந்த வேலைகளில் கிடைத்த வருமானமும் அவரது கல்விக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால், குடும்ப சூழ்நிலை அவரது கனவின் அளவை குறைக்கவில்லை.
வான்மதியின் மனதில் ஐ.ஏ.எஸ். கனவு உருவானதற்கு இரண்டு சம்பவங்கள் முக்கிய காரணமாக அமைந்தன. பள்ளிப் பருவத்தில் தொலைக்காட்சியில் பார்த்த ‘கங்கா யமுனா சரஸ்வதி’ தொடரில் இடம்பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கதாபாத்திரம் அவரது கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு தனது ஊருக்கு வந்த பெண் மாவட்ட ஆட்சியரை நேரில் பார்த்த அனுபவம், அந்த எண்ணத்தை இன்னும் வலுப்படுத்தியது.
“நானும் இப்படியொரு பொறுப்பில் இருக்க வேண்டும்” என்ற எண்ணம் பின்னர் அவரது இலக்காக மாறியது. கோயம்புத்தூரில் கணினி பயன்பாட்டியல் துறையில் பட்டப்படிப்பையும் முதுகலைப் படிப்பையும் முடித்தார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தயாரிப்புக்கு பணம் தேவைப்பட்டதால், குடும்பத்துக்கு உதவியாகவும் தனது எதிர்கால இலக்குக்காகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்தார். அப்போது இன்னொரு சோதனை அவரது வாழ்க்கையில் வந்தது.
2014-ல் UPSC நேர்காணலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், தந்தை சென்னியப்பனுக்கு மூளையில் பக்கவாதம் ஏற்பட்டது. முதுகுத் தண்டுவடத்திலும் காயம் ஏற்பட்டதால் குடும்பம் மருத்துவம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. ஒருபுறம் தந்தையின் சிகிச்சை மற்றும் குடும்பப் பொறுப்பு; மறுபுறம் வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்வுக்கான தயாரிப்பு.
இந்த இரண்டு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டார் வான்மதி. அந்த ஆண்டின் UPSC தேர்வு முடிவில் அவரது பெயரும் இடம்பெற்றது. அகில இந்திய அளவில் 152-வது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வானார்.
பின்னர் மகாராஷ்டிரா கேடரில் பணியைத் தொடங்கிய வான்மதி, நந்துர்பார், துலே உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை வகித்தார். நிர்வாக அனுபவம் தொடர்ந்து வளர்ந்த நிலையில், 2024 டிசம்பர் முதல் வார்தா மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.
இன்று அவரது கையெழுத்துக்காக பல முக்கியமான மாவட்ட நிர்வாகக் கோப்புகள் காத்திருக்கின்றன. ஆனால், இந்த உயரத்துக்கு வந்த பாதையில் ஒரு காலத்தில் பள்ளி மாணவியாக இருந்தபோது எருமைகளை மேய்த்ததும், பாலை விற்று தனது படிப்புக்கான செலவை சமாளித்ததும் இடம்பெற்றிருக்கிறது.
சிறிய வயதில் வாழ்க்கை கொடுத்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அந்தச் சிறுமி, பின்னர் நாட்டின் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றை வென்று, இன்று ஒரு மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பது அவரது வாழ்க்கைப் பயணத்தின் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்துள்ளது.
Also Read: அக்டோபர் 1 முதல் 8 முக்கிய மாற்றங்கள்.. ATM, UPI, LPG முதல் வருமான வரி வரை மாறுவது என்ன?



