தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் இன்று (அக்டோபர் 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 12,692 அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம். பெண்களின் அன்றாடப் பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் இலவச பேருந்து பயணத் திட்டம், தற்போது கூடுதல் பேருந்துகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி,இன்று(அக்டோபர் 2) முதல் விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே கிடைத்து வரும் இலவசப் பயண வசதி, மேலும் பல அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் கணிசமான எண்ணிக்கை இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 18,413 அரசு பேருந்துகளில் 12,692 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும் பெண்களுக்கும் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்கும்.
இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வரும் அரசு பேருந்துகள், விரைவு நகர்ப்புற பேருந்துகள் குறைந்த நிறுத்தங்களில் இயங்கும் பேருந்துகள், சொகுசு பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் சாதாரண பேருந்துகள், மலைப்பகுதிகளில் இயக்கப்படும் குறிப்பிட்ட சாதாரண பேருந்துகள்உள்ளிட்ட பேருந்துகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், மருத்துவத் தேவைகளுக்காக பயணம் செய்வோர் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பணிகளுக்காக பேருந்துகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். பேருந்து கட்டணத்திற்காக செலவிட வேண்டிய தொகை குறைவதால், பெண்களின் குடும்பச் செலவிலும் இதன் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பயணங்களை ஊக்குவிக்கும் வகையிலும் திட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



