தமிழகத்தில் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அரசுப் பேருந்து இலவச பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, புதிய பரிமாணத்துடன் ‘வெற்றிப் பயணத் திட்டம்’ என்ற பெயரில் முதல்வர் விஜய் இன்று (அக். 2) துவக்கி வைக்கிறார்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ‘விடியல் பயணத் திட்டம்’ என்ற பெயரில் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போதைய தவெக அரசு, இத்திட்டத்தை ‘வெற்றிப் பயணத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்து விரிவுபடுத்தியுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், முதல்வர் விஜய் இத்திட்டத்தை இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 12,692 அரசுப் பேருந்துகளில் பெண்கள் எவ்வித கட்டணமுமின்றிப் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் பெண்கள் எந்த அளவிற்குப் பயணிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், போக்குவரத்துத் துறை செயல்பாடுகளின்படி அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 30 முதல் 100 கி.மீ தூரமும், டீலக்ஸ் மற்றும் எல்.எஸ்.எஸ் பேருந்துகள் 30 முதல் 50 கி.மீ தூரமும் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரு பெண் பயணி, எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளை அடுத்தடுத்து மாறி மாறி பயணிப்பதன் மூலம் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை கூட இலவசமாக சென்றடைய முடியும்.
இதேபோல் திருச்சி – திண்டுக்கல், கோவை – ஈரோடு – சேலம், தஞ்சாவூர் – வேளாங்கண்ணி, கோவை – பழனி உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கு இடையேயான வழித்தடங்களிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் தினசரி சுமார் 84 லட்சம் பெண் பயணிகளும் திருநங்கைகளும் பயன்பெறுவார்கள் என்றும், நாள்தோறும் 16 லட்சத்திற்கும் அதிகமான ஒருவழிப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசுத் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.
Read More : MLA பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா..!! 2ம் இடம் பிடித்தவர் வெற்றியா? இடியை இறக்கிய ஐகோர்ட்..!!



