தலைநகர் சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அண்மைக்காலமாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நீடித்து வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரங்களில் நிலவும் மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் மின்தடையால் தொழில் மற்றும் விவசாயத்துறைகளும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
பொதுமக்களின் தொடர் புகார்களை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான ‘மின்னகம்’ கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தீவிர கள ஆய்வை மேற்கொண்டார். அப்போது மாநிலத்தின் மின் உற்பத்தி விவரங்கள், வெளிச்சந்தைக் கொள்முதல் நிலை மற்றும் புகார்கள் மீது எடுக்கப்படும் துரித நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இந்நிலையில், நிலவி வரும் பற்றாக்குறையை முழுமையாகச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ளது. வரும் அக்டோபர் 12 முதல் 31-ஆம் தேதி வரை இந்த மின்சாரம் பெறப்பட உள்ளது. குறிப்பாக, பீக் ஹவர் எனப்படும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தேவைப்படும் 3,000 மெகாவாட் மின்சாரமும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தேவையான 1,500 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.



