பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் தனியார் பேருந்து பயணிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் ஒரே வழித்தடத்தில் ரூ.4 வரை கட்டணம் அதிகரித்திருப்பது பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக அரசின் ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் மூலம் புறநகர் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் அரசுப் பேருந்துகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதன் நேரடி தாக்கம் தனியார் பேருந்து சேவைகளிலும் ஏற்பட்டுள்ளது. பெண்கள் பலர் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத அரசுப் பேருந்துகளைத் தேர்வு செய்வதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய் குறைந்த நிலையில், சில தனியார் பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை மாற்றியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதற்கான தாக்கம் வெளிப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் செல்லும் தனியார் பேருந்துகளில் இதுவரை ரூ.31 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அந்தக் கட்டணம் ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஒவ்வொரு பயணத்துக்கும் கூடுதலாக ரூ.4 செலுத்த வேண்டியுள்ளது.
தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பதால், இலவச பயண வசதி கிடைக்கும் பெண்களைக் காட்டிலும் ஆண் பயணிகளுக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், சில வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை நம்பியிருக்கும் பெண்களும் கூடுதல் கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இலவச பேருந்து திட்டம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஏற்கெனவே எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்திருந்தனர். பின்னர் அந்தப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், விவகாரம் நீதிமன்றத்துக்கும் சென்றது.
தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே சேவை வழங்கும் ஒருவரால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அரசின் இலவச பேருந்து திட்டத்தால் ஏற்பட்ட வருவாய் பாதிப்பை ஈடுகட்டும் முயற்சியாக தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற கட்டண மாற்றங்கள் எந்தெந்த பகுதிகளில் நடைமுறைக்கு வந்துள்ளன, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதும் கவனிக்க வேண்டியதாகியுள்ளது.
Also Read: “அம்மா… வலிக்குது” கதறிய 6 வயது சிறுமி.. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!



