நடுரோட்டில் தர்ணா.. பஸ்கள் மீது ஏறிய தொண்டர்கள்! காங்கிரஸ் எம்பி ராகுலை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீஸ்!

Rahul 2026

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்த முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்களை தில்லி காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது.


எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று (அக். 7) காங்கிரஸ் மற்றும் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஜந்தர் மந்தர் நோக்கி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த முற்றுகைப் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

பேரணி டெல்லி வீதிகளில் முன்னேற முயன்றபோது, காவல்துறையினர் இரும்புத் தடுப்புகள் மற்றும் பேருந்துகளை குறுக்கே நிறுத்தி அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இண்டியா கூட்டணி எம்.பி.க்களும் தலைவர்களும் நடுரோட்டில் அமர்ந்து தீவிர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்புகளாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் மீது ஏறி நின்று மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நிலைமை பதற்றமானதை தொடர்ந்து, தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் வாகனங்களில் ஏற்றினர். எதிர்க்கட்சித் தலைவர்கள் நடுத்தெருவில் கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ரூ.600 கோடி சொத்தை காட்டியவருக்கு ரூ.30 லட்சம்தான் பிரச்சனையா? ஆடிட்டர் செஞ்ச தப்புக்கு முதல்வர் என்ன பண்ணுவாரு? ஐகோர்ட் சரமாரி கேள்வி!

You May Like