நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்கள் முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்குகளை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி, விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். “நான் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று எனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தபோதுகூட, எனது சார்ட்டர்ட் அக்கவுண்டண்டை (Auditor) முழுமையாக நம்பித்தான் அதை செய்தேன்.
அதேபோலத்தான் முதலமைச்சர் விஜய்யும் தனது சொத்து விவரங்களைத் தனது ஆடிட்டர் மூலமாக தயாரித்து தாக்கல் செய்திருக்கக்கூடும். அதில் எதிர்பாராதவிதமாக ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான ஏதேனும் கணக்கு விவரங்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது தவறுகள் நேரிட்டிருந்தாலோ, அதை மட்டுமே காரணமாக வைத்து ஒருவரது ஒட்டுமொத்த தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவித்துவிட முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “திரையுலகில் பல ஆண்டுகள் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த ஒருவர், தனது வேட்புமனுவில் ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வெளிப்படையாக தயக்கமின்றி குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்டவர் மீது, ஆடிட்டர் செய்த சிறு கணக்கு விடுபடலான ரூ.20 முதல் ரூ.30 லட்சம் விவரங்களை மட்டும் முன்வைத்து அவரது தேர்தல் வெற்றியை பறிக்க கோருவது ஏற்புடையதா?” என மனுதாரர் தரப்பு சரமாரி கேள்வி முன்வைத்தார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Read More : குரூப் 4 தேர்வு எழுதுறீங்களா? இந்த புதிய ரூல்ஸை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க! TNPSC முக்கிய அறிவிப்பு!



