அரசு வழக்கறிஞர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தடை!

court judgement

நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் தினமும் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற டெல்லி அரசின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


டெல்லி அரசின் வழக்குத் தொடர்துறை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி, அரசு வழக்கறிஞர்கள் தங்களது மாவட்ட நீதிமன்ற வளாகம் அல்லது மாவட்டப் பொறுப்பாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் கருவி மூலமாகவோ, மொபைல் செயலி மூலமாகவோ தினமும் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி அரசு வழக்கறிஞர்கள் நலச் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி அமித் மகாஜன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி, டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, வருகைப் பதிவு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

அரசு வழக்கறிஞர்கள் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 18 மற்றும் 19ஆவது பிரிவுகளின் கீழ் நியமிக்கப்படும் நீதிமன்ற அதிகாரிகள் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. மேலும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் விவரங்கள் அன்றாட நீதிமன்ற உத்தரவுக் குறிப்புகளிலேயே பதிவு செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப் பதிவைக் கட்டாயமாக்கிய உத்தரவு போதிய காரணங்களின்றிப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தன்னிச்சையான நடவடிக்கை என்றும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. ஆதார் பயன்பாடு தொடர்பான சட்ட விதிகளுக்கும் தனியுரிமை உரிமைக்கும் இந்த உத்தரவு முரணாக இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

அரசு வழக்கறிஞர்களின் பணி நீதிமன்ற நடவடிக்கைகளை மையமாகக் கொண்டது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துதல், காவல்துறை ஆவணங்களை ஆய்வு செய்தல், சாட்சிகளின் வருகையை உறுதி செய்தல், ஜாமீன் மற்றும் நீதிமன்றக் காவல் தொடர்பான வழக்குகளுக்குத் தயாராகுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். அதன்பிறகும் நீதிமன்றம் முடியும் வரை பணியில் இருக்க வேண்டியுள்ளது.

இத்தகைய சூழலில், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட முறையில் வருகையைப் பதிவு செய்யக் கட்டாயப்படுத்துவது கூடுதல் நிர்வாகச் சுமையை ஏற்படுத்தும் என்றும், அரசு வழக்கறிஞர்களின் முதன்மைப் பணிகளைப் பாதிக்கக்கூடும் என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது. இதனால் ஜாமீன், நீதிமன்றக் காவல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டு, விரைவான நீதி வழங்கும் நடைமுறை பாதிக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு முன்பு, பயோமெட்ரிக் வருகைப் பதிவு உத்தரவுக்கு எதிராக அளிக்கப்பட்ட மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். வருகையைப் பதிவு செய்வது அவசியம் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

Also Read: வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க சதி? உயிருடன் இருப்பவரை இறந்ததாகக் காட்டியதாகப் புகார்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

Saranya

Next Post

நொய்டா விமான நிலையத்துக்கு மோடி பெயர்.. உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல்!

Fri Oct 9 , 2026
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் பெயரை, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். ஜேவர் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்துக்கு ‘நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம், நொய்டா–ஜேவர்’ எனப் பெயர் சூட்ட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விமான நிலையத் திட்டத்தை […]
7ffaa849c49825621153b5cb17eef0308844e0482f2f5938cc67e379f95e9a8b

You May Like