தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் 2 தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில், த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆரம்பம் முதலே அசைக்க முடியாத முன்னிலை பெற்று வந்தார். இறுதிச் சுற்று முடிவில் அவர் 61,470 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க-வை மரகதம் குமரவேல் வீழ்த்தியுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் 38,770 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சி 1,703 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,441 வாக்குகளையும் மட்டுமே பெற்றன. இத்தொகுதியில் மொத்தமுள்ள 2,13,788 வாக்காளர்களில் 1,84,413 பேர் வாக்களித்து, 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தாராபுரம் தொகுதியிலும் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் குவித்து வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 52,400 வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யபாமா வெற்றியை தட்டிச் சென்றார்.
இத்தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 41,078 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி 4,954 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,099 வாக்குகளையும் பெற்றன. மொத்தமுள்ள 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்து 80.30 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது.
அதேசமயம், தாராபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் வழக்கமான தேர்தல் முடிவுகளுக்கு மாறாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. மொத்தமாகப் பதிவான 1,406 தபால் வாக்குகளில் தி.மு.கவுக்கு அதிகபட்சமாக 613 வாக்குகளும், அ.தி.மு.கவுக்கு 406 வாக்குகளும் கிடைத்தன. த.வெ.கவுக்கு 255 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 19 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 வாக்குகளும் பதிவாகின.
Read More : சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் எடை குறையுமா? மருத்துவ நிபுணர் உடைக்கும் உண்மைகள்!



