அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, ரயிலில் பயணித்தபோது குடிபோதையில் இருந்த ஆண்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அஞ்சி, தனது தோழிக்கு வீடியோ அனுப்பியுள்ளார். ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் அருகே அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அசாமின் காம்ரூப் பெருநகர மாவட்டம், போண்டா பகுதியைச் சேர்ந்தவர் ஹிமாஷ்ரி போரா. 20 வயதான இவர், நடனப் போட்டியில் கலந்துகொள்வதற்காகத் தனது குழுவினருடன் விசாகப்பட்டினம் சென்றிருந்தார். கவுகாத்தியில் தேர்வு எழுத வேண்டியிருந்ததால், மற்ற குழுவினரைக் காட்டிலும் முன்னதாகத் தனியாக ரயிலில் புறப்பட்டுள்ளார்.
அக்டோபர் 6-ம் தேதி அதிகாலை 12.15 மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து 22503 என்ற எண் கொண்ட ரயிலில் ஏறிய ஹிமாஷ்ரி, எஸ்-2 பெட்டியில் பயணம் செய்துள்ளார். அவரை ரயில் நிலையம் வரை அவினாஷ் என்ற அறிமுகமான நபர் அழைத்துச் சென்றுள்ளார். அவர் ரயிலில் ஏறியதை நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன.
பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹிமாஷ்ரி தனது அண்ணி மற்றும் தோழியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். ரயில் பெட்டியில் பல ஆண்கள் குடிபோதையில் இருப்பதாகவும், அங்கு தனக்குப் பாதுகாப்பு இல்லை என அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் இருந்த பெட்டியின் சூழலைப் பதிவு செய்த வீடியோவையும் தோழிக்கு அனுப்பியுள்ளார்.
அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் ஹிமாஷ்ரியின் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவரிடமிருந்து தகவல் கிடைக்காததால் கவலையடைந்த குடும்பத்தினர், ரயில்வே உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.
இதற்கிடையே, பெண் பயணி ஒருவர் ரயிலில் எதிர்கொண்ட பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பாகப் புகார் வந்ததை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, ஸ்ரீகாகுளம் சாலை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயிலில் ஏறி பல்வேறு பெட்டிகளில் தேடுதல் நடத்தினர். ஆனால், ஹிமாஷ்ரி அங்கு இல்லை.
மாணவி பாதுகாப்பாக இருக்கிறாரா என்பது குறித்து அதிகாரிகளிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், அவர் பயணம் செய்த பெட்டியில் அவருடைய இரண்டு பைகளும் இருந்ததாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பத்தினர் மாணவியைத் தேடி வந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பொண்டூரு – தூசி ரயில் பாதைக்கு இடைப்பட்ட பகுதியில் ஹிமாஷ்ரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீகாகுளத்தில் உள்ள அரசு ரிம்ஸ் மருத்துவமனைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்படி, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததால் மாணவி உயிரிழந்திருக்கலாம் எனப் பலாசா அரசு ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை.
மாணவியின் மரணத்தை விபத்தாக மட்டும் கருத முடியாது எனச் சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினர், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆபத்து இருப்பதாகப் புகார் அளித்த பிறகும் அவரைக் கண்டுபிடிக்க முடியாதது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, ஹிமாஷ்ரியுடன் ரயிலில் பயணம் செய்தவர்கள், அவரை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவினாஷ் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ரயில் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அசாம் மற்றும் ஆந்திரப் பிரதேச காவல்துறையினருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அரசு ரயில்வே காவல்துறையினரும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஹிமாஷ்ரியின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர அசாம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து திமோரியா தொகுதி எம்எல்ஏ தபன் தாஸ் கூறுகையில், ஆந்திராவில் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடலை அசாமுக்குக் கொண்டுவருவதற்கான விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் நேரில் சென்று உடலைப் பெற வேண்டிய சிரமத்தைத் தவிர்த்து, விரைவாக உடலைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணத்தின் போது தனக்குப் பாதுகாப்பில்லை என வீடியோ மூலம் அச்சத்தை வெளிப்படுத்திய மாணவி, பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம், ரயிலில் நடந்த சம்பவங்கள் மற்றும் புகார் அளித்த பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை முடிவில் கூடுதல் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: ‘சட்டவிரோதமாக கைது செய்யக்கூடாது; அமைதியான போராட்டத்தை தடுக்க முடியாது’!. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!



