அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் பொதுமக்களின் போக்குவரத்து, இணையப் பயன்பாடு மற்றும் அன்றாட நடவடிக்கைகள் தேவையின்றிப் பாதிக்கப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி விலக வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களைச் சுற்றி எழுந்த சர்ச்சையே இந்த வழக்கு விசாரணைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. போராட்டத்தில் பங்கேற்கத் திட்டமிட்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் முன்கூட்டியே கைது செய்யப்பட்டதாகவும், ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்வதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஞாயிற்றுக்கிழமை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டங்களின்போது காவல்துறையினர் சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளில் அமைதியாகக் கூடும் மக்களைச் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்க முடியாது என்றும் தெரிவித்தது.
போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் பொதுப் போக்குவரத்து முடங்குவது குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. பொது அமைதியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லாத சூழலில் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் சேவைகளை வழக்கம்போல் இயக்க வேண்டும் என்றும், சட்டப்படி அவசியமான சூழலைத் தவிர இணையச் சேவைகளை முடக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியது. மக்களின் நடமாட்டத்துக்கும் போக்குவரத்துக்கும் தேவையற்ற தடைகள் விதிக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டது.
இதற்கிடையே, போராட்டத்தின்போது பொதுப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியது, மெட்ரோ நிலையங்களை மூடியது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய உள்துறைச் செயலர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 163-வது பிரிவின்கீழ் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கவும், வழக்கறிஞர்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்வதைத் தடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.
விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், டெல்லிக்கு வருவதற்கும் போராட்டங்களில் பங்கேற்பதற்கும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகக் கவலை தெரிவித்தார். இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தைப் பரிசீலித்து கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள் குறித்த விவரங்களையும் கேட்டனர். இதற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சனிக்கிழமை இரவு 10 மணிக்குள் அனைத்து மெட்ரோ நிலையங்களும் திறக்கப்பட்டதாகவும், இணையச் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், போராட்டங்களின்போது சட்டவிரோதத் தடுப்புக் காவல், காவல்துறையினரின் அத்துமீறல், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட புகார்கள் குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்குகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.
Also Read: “ரயிலில் பாதுகாப்பில்லை” என வீடியோ அனுப்பிய மாணவி.. சில மணி நேரத்தில் சடலமாக மீட்பு!



