மதுரையைச் சேர்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் தீபாவளிக்கு தன் முகவரிக்கு இனிப்புகள் அனுப்பி வைக்குமாறு தனது பின்தொடர்பவர்களிடம் கேட்டுக் கொண்ட விவகாரம், அவருக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. மர்ம நபர்கள் சிலர் இவரது முகவரிக்கு லட்சக்கணக்கில் விலைமதிப்பிற்கான பொருட்களை ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் ஆர்டர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
வீரமணி என்ற இன்ஃப்ளூயன்ஸர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தொலைபேசி எண் மற்றும் முகவரியைப் பகிர்ந்து, “தீபாவளிக்கு எனக்கு இனிப்புகள் அனுப்பி வையுங்கள்” எனக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அவரது வேண்டுகோளுக்குப் பதிலாக, பலரும் அவர் ஆர்டரே செய்யாத விலையுயர்ந்த பொருட்களுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் ஆர்டர் செய்துள்ளனர்.
இவரது வீட்டிற்கு ரூ. 1.69 லட்சம் மதிப்பிலான டிவி, குளிர்சாதனப் பெட்டி வாஷிங் மெஷின் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற பெரும் மதிப்பிலான பொருட்கள் டெலிவரிக்கு வந்தன.
வெறும் வீட்டு உபயோகப் பொருட்களுடன் நில்லாமல், ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் இராணுவ டாங்கிகள் கூட மர்ம நபர்கள் ஆர்டர் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. மேலும், ஸ்விகி மற்றும் சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஊழியர்களும் தொடர்ச்சியாக அவரது வீட்டிற்கு வந்து குவிந்தனர்.
ஆர்டர்கள் அனைத்தும் கேஷ் ஆன் டெலிவரி முறையில் இருந்ததால், அவற்றை வாங்க வீரமணியிடம் போதிய பணம் இல்லை; மேலும் அந்தப் பொருட்களைப் பெற தேவையான ஒருமுறை கடவுச்சொற்களையும் அவர் பகிரவில்லை.
வீரமணியின் வீட்டிற்கு அரை மணி நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட டெலிவரி பாக்கெட்டுகள் வந்தன. இதனால் தொலைதூரங்களில் இருந்து வரும் டெலிவரி ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட வீரமணி, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? டெலிவரி பாய்கள் தூரத்திலிருந்து வருகிறார்கள். தயவுசெய்து இதை நிறுத்துங்கள். என்னிடம் இவ்வளவு பணம் இல்லை” என்று கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டார்.
எனினும் இந்தத் தொல்லைகள் நின்றபாடில்லை. விலையுயர்ந்த பொருட்கள் வந்து குவிந்ததாலும், மக்கள் தன்னைத் தவறாகப் பேசுவதாலும் தான் ஊரைவிட்டுச் செல்லப் போவதாக அவர் தனது அடுத்தடுத்த பதிவுகளில் தெரிவித்தார். இதற்கிடையே, இவரது தொலைபேசி எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, சிறுநீரக தானம் தொடர்பான விசாரணைகளுக்காகவும் சில மர்ம அழைப்புகள் வந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தீபாவளிக்கு இனிப்பு கேட்ட இன்ஃப்ளூயன்ஸாருக்கு, மர்ம நபர்களின் இந்தத் தரமற்ற ‘பிராங்க்’ செயலால் கடுமையான மன உளைச்சலும், டெலிவரி ஊழியர்களுக்கு வீண் அலைச்சலும் ஏற்பட்டுள்ளது.



