கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி இரண்டு சிறு குழந்தைகளைச் சித்ரவதை செய்ததாகத் தாய் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கு அழகுவேல் என்பவருடன் திருமணமாகி, 7 வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைகள் இருவரையும் ஈத்தாமொழியில் வசிக்கும் தனது தம்பி ராஜலிங்கத்தின் வீட்டில் சுகன்யா விட்டுச் சென்றுள்ளார்.
குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்த ராஜலிங்கம், அவர்களது உடலில் ஆங்காங்கே தீக்காயங்கள் இருப்பதைக் கவனித்துள்ளார். இதுகுறித்து சுகன்யாவிடம் கேட்டபோது அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜலிங்கம், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து குழந்தைகளை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுகன்யாவைப் பிடித்து விசாரித்தபோது, குழந்தைகள் மீதான கொடுமைக்குப் பின்னால் இருந்த அதிர்ச்சிகரமான விவரங்கள் தெரியவந்தன.
பள்ளிப் பருவத்திலிருந்தே ரஞ்சித்குமார் என்பவருடன் சுகன்யாவுக்குப் பழக்கம் இருந்துள்ளது. அழகுவேலைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் இந்தத் தொடர்பு நீடித்துள்ளது. இதையறிந்த கணவர் அழகுவேலுடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சுகன்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன்பிறகு ரஞ்சித்குமாருடன் மார்த்தாண்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு குழந்தைகள் இருவரும் தங்களது தனிமையான வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதாகக் கருதிய சுகன்யாவும் ரஞ்சித்குமாரும், அவர்களைச் சிகரெட்டால் சூடு வைத்தும் கம்பால் தாக்கியும் கொடுமைப்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில், அவர்களைத் தனது தம்பி வீட்டில் சுகன்யா விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுகன்யா மற்றும் ரஞ்சித்குமார் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சொந்தக் குழந்தைகளையே சித்ரவதை செய்ததாகத் தாய் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: தீபாவளி ஸ்வீட் கேட்டால்… கேஷ் ஆன் டெலிவரியில் வீட்டுக்கு வந்த டிவி, பிரிட்ஜ் மற்றும் ஜேசிபி!. மதுரை நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!.



