மகாராஷ்டிராவில் போதிய மழையின்மை காரணமாக மாநிலத்தின் பெரும்பகுதி வறட்சிப் பிடியில் சிக்கியுள்ளது. மொத்தமுள்ள 358 வட்டங்களில் கூடுதலாக 40 பகுதிகள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 305-ஆக (85 சதவீதத்திற்கும் மேல்) உயர்ந்துள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.
முழுமையான நிர்வாக மதிப்பீடுகள் மற்றும் மத்திய அரசின் ஆய்வுகள் முடிக்க காலதாமதமாகும் என்பதால், விவசாயிகளுக்கு உடனடியாக உதவி செய்யும் வகையில் தீபாவளிக்கு முன்பாகவே ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கிலும் ரூ.5,000 ஆரம்ப நிதி உதவியாக செலுத்தப்படும் என்று முதலமைச்சர் பட்நாவிஸ் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது, தொடக்கத்தில் 265 வட்டங்கள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் மேலும் 40 வட்டங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 305 வட்டங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வறட்சிப் பகுதிகளுக்கான அனைத்து வகையான 12 மானியங்களும் மற்றும் சலுகைகளும் இந்தத் புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
1992-ஆம் ஆண்டின் பழைய விதிமுறைகள் நீக்கப்பட்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு அனைத்துக் கல்விக் கட்டண விலக்குகளும் முழுமையாக வழங்கப்படும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் விவசாயிகளைத் கடன் திருப்பிச் செலுத்த வற்புறுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் வங்கிகளுக்கும் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கைகளும் எடுக்கப்படாது. மேலும் 7.5 குதிரைத்திறன் (HP) வரையிலான விவசாய பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
மராத்வாடா பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே குடிநீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த லாரிகள் அனைத்தும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் சட்டவிரோதமான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான தீவனங்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) அரசே கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.



