மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதன்படி, அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களையும் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 1990-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் வெளியிட்ட இந்த அறிவிப்பில், ஆசிரியர்கள் மட்டுமின்றி எழுத்தர்கள் மற்றும் அரசால் பொருத்தமானவர்கள் எனத் தேர்வு செய்யப்படும் பிற நபர்களையும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த விதிகளில், கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்படக்கூடிய நபர்கள் குறித்த விவரங்கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆசிரியர்கள், எழுத்தர்கள், அரசு அலுவலர்கள் அல்லது பிற நபர்கள் எனப் பொதுவான வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தம் மூலம், எந்தெந்த பிரிவினரை இப்பணியில் ஈடுபடுத்தலாம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், வங்கிகள், நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் பணியாற்றும் எழுத்தர்கள், அலுவலர்களையும் கணக்கெடுப்புப் பணியில் நியமிக்கலாம். மேலும், மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் தகுதியானவர் எனக் கருதும் நபர்களையும் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்க முடியும்.
தனியார் உதவி பெறாத பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்கு அனுப்புவதற்கு எதிராகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கோவா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பனிப்பொழிவு இல்லாத பகுதிகளில் வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜனவரி 4, 2027 வரை நடைபெற உள்ளது.
லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் பனிப்பொழிவு காரணமாகத் தனிப்பட்ட கால அட்டவணையில் செயல்படும் பகுதிகளில் செப்டம்பர் 1 முதல் 30 வரை இந்தப் பணி நடைபெற்றது. மணிப்பூரில் 2027-ம் ஆண்டுக்கான வீடுகள் பட்டியலிடும் பணியை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு குடும்பத்தினரின் மக்கள் தொகை விவரங்கள், சமூக மற்றும் கலாசாரப் பின்னணி, பொருளாதார நிலை, இடம்பெயர்வு மற்றும் குழந்தைப்பேறு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
Also Read: “அப்பா, என்ன தொடாதீங்கப்பா” கெஞ்சிய சிறுமி… பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; இறுதியில் நடந்த அதிர்ச்சி!



