“அப்பா, என்ன தொடாதீங்கப்பா” கெஞ்சிய சிறுமி… பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; இறுதியில் நடந்த அதிர்ச்சி!

pregnancy

சொந்தக் குடும்பத்தினரிடமே சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பாதுகாப்பு அளிக்க வேண்டிய தந்தையே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், மதுரையில் 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரை ஆறு மாத கர்ப்பிணியாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட தந்தை, காவல் நிலைய விசாரணையின்போது திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாநகரப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவுக்கும் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், மதுரை தெற்கு வெளிவீதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சிறுமியிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவரது தந்தையே மதுபோதையில் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அவரைக் கர்ப்பமாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை மாலை சிறுமியின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியின் தந்தை திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை உடனடியாக மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணைக்கு வருவதற்கு முன்பே, மதுவில் விஷத்தைக் கலந்து குடித்துவிட்டு அவர் காவல் நிலையத்திற்கு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல் நிலையத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், சிறுமியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர் குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பாக இருக்க வேண்டிய குடும்பச் சூழலிலேயே சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. குழந்தைகள் தங்களுக்கு நேரும் துன்புறுத்தல்களை அச்சமின்றி வெளிப்படுத்தவும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் குடும்பத்தினர், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

Also Read: வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் குடல் பாதிக்கப்படுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Saranya

Next Post

அரசு மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கணக்கெடுப்புப் பணி.. மத்திய அரசு புதிய விதி!

Sat Oct 17 , 2026
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதன்படி, அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களையும் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 1990-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. […]
427cfddcd76a96118853ab30d7154dc7001785f8789bf0fa52254e500d2739d8

You May Like