பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு விழா குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மாதங்களாகத் தொடர்ந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இவர்களின் திருமணம் மற்றும் பிரம்மாண்ட வரவேற்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் தற்போது வெளியாகி கிரிக்கெட் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கிரீஸ் நாட்டில் திருமணம், சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு:
அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் வருகிற நவம்பர் 11 அன்று கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு விழா தொடர்பான அழைப்பிதழ்களை குடும்பத்தினர் முக்கியத் தலைவர்களுக்கு நேரில் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோர், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் ஆகியோரை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள திருமண அழைப்பிதழில், விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி, நவம்பர் 21, 2026 அன்று மாலை 6:30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா (ITC Grand Chola) விடுதியில் வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காவ்யா மாறன், பிரபல சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் தம்பதியரின் மகளாவார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் இணை உரிமையாளராகவும், நிர்வாகப் பொறுப்புகளிலும் இவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். போட்டிகளின் போது இவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது துள்ளலான இசையால் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். ‘3’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ரஜினிகாந்த், அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து உலகளாவிய புகழைப் பெற்றுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பல படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



