16-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி… கீழே விழுந்துவிடுவாளோ என்ற அச்சத்தில் அக்கம்பக்கத்தினர் செய்வதறியாமல் தவித்தனர். இறுதியில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், இரும்புக் கம்பிகளை அறுத்து சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். சீனாவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
சீனாவின் புஜியான் மாகாணம், ஜாங்பிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தக் குடியிருப்பின் 16-வது மாடியில் வசிக்கும் தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தை காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளது. இதனால், அருகிலுள்ள கடைக்குக் காய்கறிகள் வாங்குவதற்காகத் தாய் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை விழித்துள்ளது.
வீட்டில் தாய் இல்லாததை உணர்ந்த சிறுமி, வீட்டின் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளுக்கு இடையே வெளியே செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பிகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை, 16-வது மாடியிலிருந்து அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பயத்தில் சிறுமி அலறிய சத்தம் குடியிருப்பில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
உடனே வெளியே வந்த அக்கம்பக்கத்தினர், குழந்தை எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடலாம் என்ற அச்சத்தில் பதற்றமடைந்தனர். சிறுமியைத் தாங்கிப் பிடிக்கும் நோக்கில், அவருக்குக் கீழே ஒரு சிறிய நாற்காலியை வைத்தனர். ஆனால், குழந்தை இருந்த உயரம் காரணமாக அவர்களால் நெருங்கிச் சென்று மீட்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் சிறுமி சிக்கியிருந்த பகுதியில் உள்ள இரும்புக் கம்பிகளை அறுத்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
உயரமான மாடியில் சிறுமி சிக்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிய காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் சூழலிலும், ஜன்னல் மற்றும் பால்கனி பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
Also Read: ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவுக்கு தங்க வேட்டை.. ஒரே போட்டியில் 3 பதக்கங்கள்!



